"வேகப்பந்து வீச்சாளர்களுடன் உட்கார வச்சாங்க அப்போ..".. ஆரம்பகால வாழ்க்கை குறித்து ஜடேஜா உருக்கம்
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடத் துவங்கிய போது அணியில் தனக்கு வழங்கப்பட்ட பேட்டிங் வரிசையால் தனது தன்னம்பிக்கை மற்றும் மன உறுதி எவ்வாறு கடுமையாகப் பாதிக்கப்பட்டது என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை மற்றும் துலீப் கோப்பைகளில் முச்சதங்கள் (300+ ரன்கள்) விளாசி அசத்தியுள்ள ஜடேஜா, அங்கு 60க்கும் அதிகமான பேட்டிங் சராசரியை வைத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "என்னுடைய ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வாழ்க்கையை நீங்கள் பார்த்தால், எனது பேட்டிங் சராசரி 60க்கும் அதிகமாக இருக்கும். எனவே என்னால் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்குள் எப்போதும் இருந்தது. ஆனால் சில நேரங்களில் இந்திய அணிக்குள் நுழையும்போது நமக்கு தகுந்த பேட்டிங் வரிசை கிடைப்பதில்லை. அதுவே பல வீரர்களின் சறுக்கலுக்குக் காரணமாகிவிடுகிறது" என்று தெரிவித்தார்.

இந்திய டெஸ்ட் அணியில் தொடக்க காலத்தில் ஜடேஜா பெரும்பாலும் 8 மற்றும் 9வது வரிசையிலேயே பேட்டிங் இறக்கப்பட்டார். இது குறித்து பேசிய அவர், "அணி நிர்வாகம் என் மீது முழு நம்பிக்கை வைக்கவில்லையோ என்ற சந்தேகம் எனக்குள் எழுந்தது. 8 அல்லது 9வது வீரராக பேட்டிங் பேடுடன் பெவிலியனில் காத்திருக்கும் போது, எனது பக்கத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் அமர்ந்திருப்பார்கள். அப்போது எனக்குள் ஒருவித தாழ்வுமனப்பான்மை ஏற்பட்டு எனது தன்னம்பிக்கை குறையத் தொடங்கியது" என்றார்.
ஜடேஜா இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 8வது வரிசையில் 32 இன்னிங்ஸ்களில் விளையாடி 34.22 சராசரியையும், 9வது வரிசையில் 12 இன்னிங்ஸ்களில் விளையாடி 40க்கும் அதிகமான சராசரியையும் வைத்துள்ளார். உள்நாட்டு கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் 300+ ரன்கள் அடித்து பேட்டிங் சாதனைகளை செய்த போதும், சர்வதேச கிரிக்கெட்டில் ஏற்படும் அழுத்தம் மற்றும் அணி நிர்வாகத்தின் தேவைக்காக வீரர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது என்பதை ஜடேஜா சுட்டிக்காட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications
