சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தவிர்க்க முடியாத வீரராக முக்கிய பங்காற்ற இருக்கிறார். அவர் ஆல்ரவுண்டர் என்றாலும், பந்துவீச்சில் குறிப்பிட்டு சொல்லும்படியான பெரிய சாதனைகளை செய்ததில்லை. அதனாலேயே ரவீந்திர ஜடேஜாவுக்கு பல சமயங்களில் யாரும் முக்கியத்துவம் அளிப்பதில்லை.
இந்திய அணியில் அவர் ஆடும்போதும் இதே விவாதம் பலமுறை வந்துள்ளது. சஞ்சய் மஞ்ச்ரேகர் 2019 உலகக்கோப்பை தொடரின் போது ரவீந்திர ஜடேஜா பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் தனித்துவமான வீரர் அல்ல என்ற பொருள் படும்படி விமர்சனம் செய்திருந்தார்.

அதற்கு அப்போது கடும் எதிர்வினை எழுந்தது. ரவீந்திர ஜடேஜா தனிப்பட்ட முறையில் மஞ்ச்ரேக்கரை விமர்சித்து இருந்தார். சிஎஸ்கே அணியிலும் ஜடேஜா பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத வீரர் என்ற விமர்சனம் அவ்வப்போது இருந்து வந்துள்ளது. ஆனால், முக்கியமான நேரங்களில், முக்கியமான போட்டிகளின்போது ரவீந்திர ஜடேஜா தனது சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார்.
முக்கியமாக ஐபிஎல் தொடரில் அவர் 211 இன்னிங்ஸ்களில் 160 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருக்கிறார். ஆனால் அவரது எக்கனாமி 7.62 ஆக உள்ளது. இது டி20 போட்டிகளைப் பொருத்தவரை ஒரு நல்ல ரன் விகிதம் ஆகும். அவர் ஒரு ஓவருக்கு 7.62 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுக்கிறார் என்பது ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது நல்ல செயல்பாடுதான்.
அதேபோல பேட்டிங்கில் அவர் 184 இன்னிங்ஸ்களில் 2959 ரன்கள் சேர்த்து இருக்கிறார். அவர் அதிக ரன்கள் எடுக்கவில்லை என்பது போல இருந்தாலும் அவரது பேட்டிங் சராசரி 27.39 ஆகும். அவர் எப்போதும் பின்வரிசையில் களம் இறங்குவதால் அவருக்கு அதிக பந்துகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை.
பேட்டிங் மற்றும் பவுலிங் மட்டுமல்லாது ரவீந்திர ஜடேஜாவின் முக்கியமான திறன் என்பது ஃபீல்டிங் தான். அவர் நிற்கும் திசையில் பந்தை அடிக்கவே பல பேட்ஸ்மேன்கள் அஞ்சுவார்கள். ஒருவேளை ரவீந்திர ஜடேஜா இருக்கும் பக்கம் பந்தை அடித்தால் ரன் ஓடுவதற்கு தயங்குவார்கள். அதுதான் ரவீந்திர ஜடேஜாவின் உண்மையான பலம்.
ரவீந்திர ஜடேஜா உலகின் சிறந்த ஃபீல்டர்களில் ஒருவராக இருக்கிறார். எனவே, மூன்று விதத்திலும் ரவீந்திர ஜடேஜா சிஎஸ்கே அணியின் முக்கிய வீரராக இருக்கிறார். தனித்தனியாகப் பார்க்கும்போது அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாதது போல தெரிந்தாலும், ஒட்டுமொத்தமாக ஒரு வீரர் மூன்று விதமான கிரிக்கெட் போட்டி செயல்பாட்டிலும் சிறப்பாக செயல்படுவது என்பது தனித்துவமான விஷயம்தான்.
அந்த வகையில் சிஎஸ்கே அணியின் துருப்புச்சீட்டு வீரர்களில் ஒருவராக இருக்கிறார் ரவீந்திர ஜடேஜா. 2023 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் கடைசி இரண்டு பந்துகளில் ஒரு சிக்ஸ் மற்றும் ஒரு ஃபோர் அடித்து சிஎஸ்கே அணிக்கு ஐந்தாவது கோப்பையை பெற்றுக்கொடுத்தது போல ஒரு அற்புதமான தருணத்தை அவர் 2025 ஐபிஎல் தொடரிலும் செய்ய வேண்டும் என்பதே சிஎஸ்கே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.