2027 உலககோப்பை இந்திய அணியில் இந்த ஆல்ரவுண்டர் நிச்சயம் இடம் பிடிப்பார்.. ரவி சாஸ்திரி கருத்து
மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணியில் ஆல் ரவுண்டர் ஜடேஜா இடம் பெறாதது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து விளக்கம் அளித்த தேர்வு குழு தலைவர் அஜித் அகார்கர், ஏற்கனவே அணியில் அக்ஸர் பட்டேல் இருந்ததால் ஜடஜாவை ஆஸ்திரேலியா ஒரு நாள் தொடரில் சேர்க்கவில்லை என்று கூறி இருந்தார்.
எனினும் ஜடேஜா சமீப காலமாக டெஸ்ட் தொடரில் அபாரமாக விளையாடி வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து தொடரில் மொத்தம் அவர் மூன்று சதம் அடித்திருந்தார். இந்த நிலையில் ஜடஜாவின் எதிர்காலம் குறித்து பேசிய ரவி சாஸ்திரி, 2027 உலக கோப்பை தொடரில் நிச்சயம் ஜடேஜா இடம் பெறுவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், அனைவரும் தற்போது 2027 உலக கோப்பை குறித்து பேசிக்கொண்டு வருகிறார்கள். அப்படி பேசும் போது ஜடேஜாவை யாரும் அணியில் இடம்பெற மாட்டார் என்று எண்ணி விடாதீர்கள். நிச்சயமாக இந்திய அணியில் ஜடேஜாவுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். அதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம்.
ஜடேஜா போன்ற வீரர்கள் எல்லாம் பில்டிங்கில் அவரை விட இளம் வீரரை போல் பில்டிங் செய்கிறார். பந்து பௌண்டரிக்கு செல்லாமல் அவர் ஓடி தடுக்கும் விதம் பார்ப்பதற்கு அவ்வளவு அபாரமாக இருக்கும். ஆஸ்திரேலிய தொடரில் ஜடேஜா ஏன் இடம்பெறவில்லை என்பதற்கான காரணம் எனக்கு புரிகிறது. ஏனென்றால் இது வெறும் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் தான்.
ஏற்கனவே அக்சர் பட்டேல் இருக்கின்றார். ஆனால் உலகக்கோப்பை தொடர் தென்னாப்பிரிக்காவில் தான் நடைபெறுகிறது. அங்கு நிறைய மைதானங்கள் இருக்கிறது. நிறைய கள சூழல் இருக்கிறது. எனவே அக்சர் பட்டேல், ஜடேஜா என இரண்டு வீரர்களுமே விளையாட வாய்ப்பு ஏற்படலாம் என்று கூறியிருக்கிறார்.
இதனை தொடர்ந்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், ஜடேஜாவை பற்றி அனைவரும் என்ன நினைக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அவருக்கு வயது ஆவது கிடையாது. பெஞ்சமின் பட்டன் என்ற திரைப்படத்தில் வருவது போல் அவருக்கு வயது குறைந்து கொண்டே போகிறது. எப்போதெல்லாம் ஜடேஜாவை பற்றி பேசும் போது எனக்கு வார்னே சொன்னது தான் ஞாபகத்துக்கு வரும். வார்னே எப்போதும் தவறாக ஒருவர் குறித்து கணித்தது கிடையாது என்று ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications