சிட்னி: சொந்த நாட்டை விட ஐபிஎல் தான் முக்கியம் என ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் நினைத்ததால் தான் ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்லவில்லை என முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஜான்சன் சரமாரியாக விமர்சித்திருக்கிறார். அதை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் இது பூதாகரமாக வெடித்துள்ளது.
பலரும் ஐபிஎல் தொடருக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் முக்கியத்துவம் அளிப்பதை விமர்சித்து வருகின்றனர். பணத்துக்காக ஆஸ்திரேலியாவை கைவிட்டு விட்டார்கள் என விமர்சித்து உள்ளனர். 2025 ஐபிஎல் தொடர் திட்டமிட்டபடி நடந்திருந்தால் மே 27 அன்று முடிந்து இருக்கும். ஜூன் 10 அன்று 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி துவங்கவிருந்த நிலையில், இடையே சுமார் பத்து நாட்கள் வரை ஆஸ்திரேலியா வீரர்களுக்கு பயிற்சி செய்வதற்கான அவகாசம் கிடைத்திருக்கும்.

ஆனால் 2025 ஐபிஎல் தொடர் இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றத்தால் பத்து நாட்கள் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியது. அதனால் ஜூன் 3 அன்றுதான் இறுதிப் போட்டியை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இடம்பெற்றவர்களில் ஜோஷ் ஹேசில்வுட் மட்டுமே ஜூன் 3 வரை இந்தியாவில் இருந்து ஐபிஎல்-ல் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கடைசி லீக் போட்டி முடிந்த உடனேயே ஆஸ்திரேலியாவுக்கு திரும்பி பயிற்சி முகாமில் பங்கேற்றார். அதுபோல ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுசேன், அலெக்ஸ் கேரி, உஸ்மான் கவாஜா, நாதன் லியோன் போன்ற பல வீரர்களுக்கு ஐபிஎல் அணிகளில் இடம் கிடைக்காததால் அவர்கள் சுமார் இரண்டு வார காலத்திற்கும் மேலாக இறுதிப் போட்டிக்காக பயிற்சி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஆஸ்திரேலியா அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மே 7 அன்று ஐபிஎல் போட்டி நிறுத்தப்பட்ட போது ஆஸ்திரேலியாவுக்கு திரும்பினார். அதன் பிறகு ஐபிஎல் மீண்டும் தொடங்கிய போது அவர் வரவில்லை. அதன்படி பார்த்தால், ஜோஷ் ஹேசில்வுட் என்ற ஒரு வீரர் மட்டுமே ஐபிஎல்-ல் இறுதிப் போட்டி வரை விளையாடியிருக்கிறார்.
மற்றவர்கள் ஏற்கனவே திட்டமிட்டிருந்த மே 27 ஆம் தேதிக்கு முன்பே தங்கள் நாட்டுக்கு திரும்பி விட்டனர். ஐபிஎல்-ல் இடம் பிடிக்காத வீரர்கள் அதற்கு முன்பு இருந்தே பயிற்சியில் ஈடுபட்டனர். அதனால் ஜோஷ் ஹேசில்வுட் மட்டும் தற்போது ஆஸ்திரேலியாவில் விமர்சனத்தில் சிக்கி இருக்கிறார்.
அவருக்கு ஏற்கனவே அடிக்கடி காயம் ஏற்பட்டு பந்து வீச முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. அவரது உடல் தகுதி அபாய கட்டத்தில் இருக்கும் நிலையில் அவர் ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டி வரை ஆட முடிவெடுத்தது தான் இப்போது சிக்கலாகி இருக்கிறது. ஐபிஎல் தொடரின் இடையே அவருக்கு விரலில் காயம் இருந்தது. அதனால் அவர் பந்து வீச முடியாத நிலையில் இருந்தார். சில போட்டிகளில் அவர் விளையாடவில்லை.
அப்போதே அவர் ஆஸ்திரேலியாவுக்கு திரும்பி, மீண்டும் இந்தியாவுக்கு வராமல் தனது நாட்டுக்காக உலக டெஸ்ட் இறுதிப் போட்டிக்காக தயாராவார் என்று அனைவரும் நம்பினர். ஆனால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக பிளே ஆப் மற்றும் இறுதிப் போட்டியில் விளையாட அவர் முடிவு செய்தார்.
அதனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு தயாராக ஹேசில்வுட்டுக்கு மிகச் சில நாட்களே இருந்தன. அவரது செயல்பாடும் அந்த இறுதிப் போட்டியில் திருப்திகரமாக இல்லை. இதை சுட்டிக்காட்டி பலரும் விமர்சித்து இருக்கின்றனர். இனிவரும் ஆண்டுகளில் ஆஸ்திரேலியா வீரர்கள் தங்கள் சொந்த நாட்டு தொடர் இருக்கும்போது ஐபிஎல்-ல் இருந்து விலகுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.