பெங்களூர்: 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோசமாக செயல்பட்டு வருவது ஒரு புறம் இருந்தாலும் இதுவரை ஐபிஎல் கோப்பை வெல்லாத அணி என தொடர்ந்து கிண்டல் செய்யப்பட்டு வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மிகப்பெரிய எழுச்சியை சந்தித்துள்ளது. அந்த அணி தற்போது புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
தான் ஆடிய நான்கு போட்டிகளில் மூன்று வெற்றிகளைப் பெற்றுள்ளது. அதில் முக்கிய அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளை அந்தந்த அணிகளின் சொந்த மைதானங்களில் வீழ்த்தி வரலாறு படைத்திருக்கிறது. இதை அடுத்து இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஆண்டாக இருக்குமா? இந்த ஆண்டு அந்த அணி ஐபிஎல் கோப்பை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டி இருக்கிறது.

அந்த அணியின் ரசிகர்களும் முன்பை விட அதிக உற்சாகத்தில் உள்ளனர். 2025 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனது முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அதன் சொந்த மைதானத்தில் வீழ்த்தியது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.
அடுத்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியை வான்கடே மைதானத்தில் வீழ்த்தியது. இந்த இரண்டு வரலாற்று சாதனைகளும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை இந்த ஆண்டு ஐபிஎல் வெல்லும் அணியாக முன்னிறுத்துகிறது. அதற்கு முக்கிய காரணமாக பலரும் சுட்டிக்காட்டுவது அந்த அணியின் புதிய கேப்டன் ரஜத் படிதார் தான்.
அவர் கேப்டனாக சரியான முடிவுகளை எடுப்பதுடன் ஒரு பேட்ஸ்மேனாகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். ஒரு கேப்டன் எப்படி விளையாடுகிறாரோ அதை பொறுத்துதான் அந்த அணியின் ஆட்டமும் இருக்கும் என்று சொல்லப்படுவதுண்டு. அதைப்போல ரஜத் படிதார் இதுவரை ஆடிய நான்கு போட்டிகளில் 161 ரன்கள் எடுத்து இருக்கிறார். இரண்டு அரை சதங்களை அடித்து இருக்கிறார். அவரது சராசரி 40.25 என்பதாக உள்ளது. ஸ்ட்ரைக் ரேட் 152.06 என்பதாக உள்ளது.
அவரது தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளை அதன் சொந்த மைதானங்களில் வீழ்த்தியதால் அவரது கேப்டன்சி மீதும் தனி மரியாதை ஏற்பட்டு உள்ளது. அடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முக்கிய வீரரான விராட் கோலி இதுவரை ஆடிய போட்டிகளில் சிறப்பாக விளையாடியிருக்கிறார். நான்கு போட்டிகளில் 164 ரன்கள் எடுத்து இருக்கிறார். இரண்டு அரை சதங்களை அடித்து இருக்கிறார். மேலும் விக்கெட் வீழ்ச்சி தடுத்து நிறுத்தும் பணியை சிறப்பாக செய்து வருகிறார்.
அந்த அணியின் துவக்க வீரர் ஃபில் சால்ட் கலவையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். எனினும் நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் ஆடி வருகிறார். இதுவரை 106 ரன்கள் சேர்த்து இருக்கிறார். லியாம் லிவிங்ஸ்டன் மற்ற பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் அளிக்கும் போது முன்னே வந்து சிறப்பான ஆட்டத்தை ஆடுகிறார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் 40 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து இருந்தார். மேலும் ஆல்ரவுண்டராகவும் சிஎஸ்கே அணிக்கு எதிராக இரண்டு விக்கெட் வீழ்த்தி திருப்புமுனையாக இருந்தார்.
அடுத்து இந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு கிடைத்த மிகப்பெரிய வீரர் என்றால் அது ஆல் ரவுண்டர் க்ருனால் பாண்டியா தான். அவர் இதுவரை 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். ஆனால் அதைவிட சிறப்பான விஷயம் என்னவெனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரை சிறப்பாக வீசி அந்தப் போட்டியில் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
அந்த வகையில் இவரது அனுபவம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு முக்கியமான போட்டிகளின் போது கை கொடுக்கும் என்று நம்பலாம். குறிப்பாக பவர் பிளேவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விளையாடும் போது க்ருனால் பாண்டியா மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்.
அடுத்து ஜோஷ் ஹேசல்வுட்டின் வேகப்பந்துவீச்சு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் இதுவரை 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அவரது எக்கனாமி 6.75 என்பதாக உள்ளது. ஜிதேஷ் சர்மா ஃபினிஷராக சிறப்பாக செயல்பட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் 20 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்தார். அது அந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வெற்றிக்கு ஒரு காரணமாகவும் இருந்தது.
இப்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம்பெற்று இருக்கும் வீரர்கள் இந்த ஆண்டு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கேப்டன்சியும் தரமாக உள்ளது. இது மட்டும் இன்றி ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு பல விஷயங்கள் சாதகமாக உள்ளன.
முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய மூன்று அணிகளை அதன் சொந்த மைதானங்களில் வீழ்த்தி உள்ளது. இதன் மூலம் அதிக கோப்பைகளை வென்ற மூன்று அணிகளை வீழ்த்தி மிகப்பெரிய நேர்மறை சக்தியை பெற்று இருக்கிறது.
அடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நெட் ரன் ரேட் நான்கு போட்டிகளுக்குப் பிறகு 0.867 என்பதாக உள்ளது. இது பிளே ஆஃபிற்கு அருகே செல்லும்போது நிச்சயம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு உதவி செய்யும். அந்த அணியின் பேட்டிங் ஆர்டர் மற்ற அணிகளுடன் ஒப்பிடும்போது பலமாக உள்ளது. அதிக பலவீனங்கள் இல்லை.
ஒரு பேட்ஸ்மேன் சரியாக விளையாடவில்லை என்றால் மற்றொரு பேட்ஸ்மேன் முன் வந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். டாப் ஆர்டரில் ஃபில் சால்ட், ரஜத் படிதார், விராட் கோலி ஆகிய மூவரின் சராசரி 43.66 என்பதாக உள்ளது. இதுவே அந்த அணியின் பேட்டிங்கில் மிகப்பெரிய பலமாக இருக்கிறது.
வேகப்பந்துவீச்சில் ஜோஷ் ஹேசல்வுட், புவனேஸ்வர் குமார், யாஷ் தயாள் ஆகியோர் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்படுகின்றனர். அவர்கள் மூவரின் ஒட்டுமொத்த சராசரி 7.2 என்பதாக உள்ளது.
சுழற்பந்துவீச்சில் க்ருனால் பாண்டியா மற்றும் சுயாஷ் சர்மா கட்டுக் கோப்பாக பந்து வீசி உள்ளனர். இதன் மூலம் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் அதிக பலவீனங்கள் இல்லாத அணியாக இருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். இதுவரை வெவ்வேறு மைதானங்களில் விளையாடி இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அதிக ஸ்கோர்களையும் குவித்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 177 ரன்கள், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 196 ரன்கள், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 169 ரன்கள், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 221 ரன்கள் சேர்த்துள்ளது. இதன் மூலம் பேட்டிங்கில் எவ்வளவு பெரிய ஸ்கோராக இருந்தாலும் அடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் உள்ளது.
இதற்கு முந்தைய ஆண்டுகளில் எல்லாம் லீக் சுற்றின் முதல் பாதியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சொதப்பினாலும் இரண்டாவது பாதியில் வெற்றிகளை பெறுவதுமாக இருக்கும். ஆனால் இந்த முறை துவக்கத்திலிருந்து நான்கு போட்டிகளில் மூன்று வெற்றிகளை பெற்றிருப்பதால் அந்த அணி உற்சாகத்தில் உள்ளது. எனவே அந்த அணி நிச்சயமாக இந்த ஆண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என நம்பலாம்.
மற்ற முக்கிய அணிகள் எல்லாம் பேட்டிங் வரிசையிலும் பவுலர்களை தேர்வு செய்வதிலும் இன்னும் திணறி வருகின்றன. ஆனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முழுமையான அணியாக இருக்கிறது. இந்த உத்வேகம் அந்த அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் செல்லுமா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.