பெங்களூர்: ஐபில் கோப்பையை 18 ஆண்டுகளில் முதல் முறையாக ஆர்சிபி அணி வென்று சாதனை படைத்த நிலையில் கூடவே மிகப்பெரிய பிரச்சனைகளில் தற்போது சிக்கி இருக்கிறது. பெங்களூருவில் வெற்றி பேரணி நிகழ்ச்சி நடத்தப் போவதாக ஆர்சிபி அணி அறிவித்ததில் பல லட்சம் ரசிகர்கள் கூடி கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதில் 11 பேர் உயிரிழந்தனர். 47 பேர் காயமடைந்திருக்கிறார்கள். இந்த விவகாரம் தற்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழலில் ஆர் சி பி அணி மீது தற்போது பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதனால் ஆர்சிபி அணி நிர்வாகத்தை விசாரிக்க பெங்களூரு காவல்துறை முடிவு எடுத்துள்ளது.

ஆர் சி பி அணி கோப்பையை வென்ற அடுத்த நாள் பெங்களூரில் திறந்தவெளி பேருந்தில் பேரணி நடத்தப்படும் என்று ஆர் சி பி அணி நிர்வாகம் சமூக வலைத்தளத்தில் அறிவிப்பை வெளியிட்டது. மேலும் இதற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை, போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு அம்சங்களை காரணம் காட்டி இந்த பேரணியை செய்ய வேண்டாம் என்று அறிவித்தது.
இந்த அறிவிப்புக்குப் பிறகு மீண்டும் மாலை 3 மணிக்கு ஆர் சி பி சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியானது. அதில் வெற்றி பேரணி விதான் சவுதாவிலிருந்து சின்னசாமி மைதானம் வரை மாலை 5 மணிக்கு நடைபெறும். இதனை தொடர்ந்து மைதானத்தில் உள்ளே பாராட்டு விழா நடத்தப்படும். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இலவச பாஸ்கான லிங்க் மற்றும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ரசிகர்களுக்கு மட்டும்தான் அனுமதி என்றும், காவல்துறை அறிவுறுத்தலை கேட்டு நடந்து கொள்ளுங்கள் என்றும் ஒரு பதிவு வெளியானது.
இதுதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. காவல்துறை அனுமதி மறுத்த பிறகும் ஏன் இவ்வாறு சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியானது என்று பெங்களூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களுர் விதான் சவுதாவில் பாராட்டு விழா நடத்த அனுமதி வேண்டும் என மூன்றாம் தேதி, இரவு கடிதம் வழங்கப்பட்டு இருப்பதாக ஆர்சிபி அணி நிர்வாகம் கூறி இருக்கிறது.
ஆனால் தங்களுக்கு கடைசி நேரத்தில் தான் இந்த நிகழ்ச்சி பற்றி தெரியும் என்று கர்நாடக அரசு தெரிவித்திருக்கிறது. மேலும் விதான் சவுதாவில் ஒரு நிகழ்ச்சி மற்றும் சின்னசாமி மைதானத்தில் மற்றொரு நிகழ்ச்சி என ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு நிகழ்ச்சியில் நடத்துவதன் மூலம் பாதுகாப்பு பணியை மேற்கொள்வதில் சிரமம் இருக்கும் என்று பெங்களூர் போலீசார் தெரிவித்து இருந்தனர்.
ஆனால், அதையும் மீறி இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகவும் கர்நாடகா அரசு தெரிவித்து இருக்கிறது. கடைசி நேரத்தில் இந்த பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது தான் பிரச்சனை என்றும், இரண்டு நாட்கள் இடைவெளி இருந்தால் நல்ல முறையில் திட்டம் மேற்கொள்ளப்பட்டிருக்கும் என்றும் கர்நாடகா அரசு தெரிவித்து இருக்கிறது.