சுத்தியலை மறுபடியும் எடுத்ததால் எங்களுக்கு ரூ 4 கோடி வேஸ்ட்.. மல்லையா குமுறல்
பெங்களூர்: யுவராஜ் சிங் ஏலம் விடப்பட்டபோது, ரூ. 10 கோடிக்கு அவரை கிட்டத்தட்ட ஏலத்தில் எடுத்து விட்டது ராயல் சேலஞ்ர்ஸ் பெங்களூர் அணி. ஏலம் முடிந்து விட்டதாக உணர்த்தும் வகையில் சுத்தியலை ஏலம் நடத்தியர் கீழே வைத்தார். ஆனால் திடீரென கொல்க்ததா குறுக்கிட்டு விட்டதால், ஏலத் தொகை ரூ. 14 கோடிக்குப் போய் விட்டது என்று பெங்களூர் அணியின் உரிமையாளரான விஜய் மல்லையா புலம்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் ஐபிஎல் ஆட்சி மன்றக் குழுவிலும் புகார் கொடுத்துள்ளார். ஏலம் நடந்தபோது நடந்த இந்தக் குழப்பம் காரணமாகவே தனது அணிக்கு தேவையில்லாமல் ரூ. 4 கோடி வீண் செலவாகி விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்று நடந்த முதல் நாள் ஏலத்தின்போது ரூ. 14 கோடிக்கு யுவராஜ் சிங்கை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்தது. ஆனால் இது 10 கோடியிலேயே முடிந்திருக்க வேண்டியது என்று கூறியுள்ளார் மல்லையா. இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது...

ரூ. 10 கோடிதான்
ரூ. 10 கோடியில் ஏலம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டது. ஏலம் நடத்தியவரும் சுத்தியலை கீழே வைக்கப் போய் விட்டார். அந்த நேரத்தில் திடீரென கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஏலத்தில் புகுந்து விட்டது.

சுத்தியலை வச்சாச்சுன்னா அவ்வளவுதானே...
சுத்தியலை கீழே வைத்து விட்டால் ஏலம் முடிந்தது என்றுதான் நான் நினைத்தேன். அப்படித்தானே அர்த்தம் வரும்.. ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஏலத்தில் இணைந்ததால் ஏலம் மீண்டும் தொடர்ந்தது. கடைசியில் அது ரூ. 14 கோடியில் போய் நின்று விட்டது.

புகார்
இதுதொடர்பாக நாங்கள் ஆட்சிமன்றக் குழுவிடம் புகார் கொடுத்துள்ளோம். இதுகுறித்து பரிசீலிக்குமாறும் கேட்டுள்ளோம். பரிசீலிப்பார்கள் என்று நம்புகிறோம் என்றார் மல்லையா.

திருப்திதான்
மற்றபடி முதல் நாள் ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்குக் கிடைத்த வீரர்கள் குறித்து மல்லையா திருப்தி தெரிவித்துள்ளார். யுவராஜ் சிங் அருமையான வீரர். அவர் கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன். மற்ற வீரர்கள் குறித்தும் எனக்குத் திருப்தியே என்றார்.


Click it and Unblock the Notifications