IPL 2026: ஆர்சிபி அணியில் இருந்து சர்ச்சை பவுலர் அதிரடி நீக்கம்.. ஆனால் ஒப்பந்தத்தில் தொடர்வார்!
மும்பை: 2026 ஐபிஎல் தொடரில் இருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பாலியல் வன்கொடுமை புகார்கள் மற்றும் வழக்குகள் காரணமாக அவர் இந்த சீசனில் விளையாட மாட்டார் என ஆர்சிபி அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதே சமயம், அவர் ஆர்சிபி அணியின் ஒப்பந்தத்தில் தொடர்கிறார். அவர் 2026 ஐபிஎல் தொடரில் இருந்து நீக்கப்பட்டு இருந்தாலும், ஆர்சிபி அணியின் வீரராகவே இருக்கிறார்.
2026 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின், கேப்டன் ரஜத் படிதார் தலைமையில் பயிற்சியாளர் ஆண்டி பிளவர் முன்னிலையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. க்ருணால் பாண்டியா, ஜித்தேஷ் சர்மா, சுயாஷ் சர்மா மற்றும் புவனேஷ்வர் குமார் உள்ளிட்ட பல வீரர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளனர். ஆனால், கடந்த மார்ச் 18 ஆம் தேதி தொடங்கிய இந்த முகாமில் யாஷ் தயாள் பங்கேற்கவில்லை.

இது குறித்து விளக்கமளித்துள்ள பெங்களூரு அணியின் கிரிக்கெட் இயக்குனர் மோ போபாட், "யாஷ் தயாள் தற்போது தனிப்பட்ட சில பிரச்சனைகளை எதிர்கொண்டு வருவதால் இந்த சீசனில் அவர் அணியில் இணைய மாட்டார். இருப்பினும் அவர் தொடர்ந்து எங்கள் அணியின் ஒப்பந்தத்தில் தான் உள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜெட்டாவில் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்பாக பெங்களூரு அணி யாஷ் தயாளை விடுவிக்காமல் தக்கவைத்தது. அவர் மீது இரண்டு பாலியல் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், பெங்களூரு அணி அவரை தக்கவைத்தது ரசிகர்களிடையே கடும் விமர்சனங்களை எழுப்பியது. மேலும், வழக்குகள் காரணமாக உத்தரப் பிரதேச மாநில கிரிக்கெட் வாரியமும் அவரை ஒட்டுமொத்த உள்ளூர் தொடர்களில் இருந்தும் அதிரடியாக நீக்கியது. இதற்கிடையே, கடந்த மாதம் ஸ்வேதா பண்டிர் என்ற சமூக வலைதள பிரபலத்தை யாஷ் தயாள் திருமணம் செய்துகொண்டார்.
அவர் மீது கடந்த 2025 ஆம் ஆண்டில் காசியாபாத்தில் 2 வழக்குகளும், ஜெய்ப்பூரில் உள்ள சங்கனேர் சதார் காவல் நிலையத்தில் 2023 முதல் ஏப்ரல் 2024 வரையிலான காலகட்டத்தில் ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற கடுமையான கிரிமினல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ள நிலையில், ஐபிஎல் தொடரில் அவர் விளையாடுவது சமூகத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என ரசிகர்கள் தொடர்ந்து இணையத்தில் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே ஆர்சிபி அணி இந்த முடிவை எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications