அம்பயர் தீர்ப்பால் ஆவேசம்.. RCB வீரர் செய்த செயல்.. 2027 ஐபிஎல் முதல் போட்டியில் விளையாட தடை
அகமதாபாத்: 2026 ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி சாம்பியன் பட்டம் வென்ற மகிழ்ச்சியில் இருந்தாலும், அந்த அணியின் நட்சத்திர அதிரடி ஆட்டக்காரர் டிம் டேவிட்டுக்கு பிசிசிஐ அதிரடியாக ஒரு போட்டி விளையாட தடை விதித்துள்ளது. இறுதிப்போட்டியின் போது நடுவர் மீது ஆத்திரத்தில் அவர் செய்த செயலால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆட்டத்தின் 10-வது ஓவரில் வாஷிங்டன் சுந்தருக்கு நாட்-அவுட் வழங்கப்பட்ட சமயத்தில் ஆர்சிபி வீரர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். அப்போது ஆர்சிபி வீரர் டிம் டேவிட், மைதானத்தில் இருந்த கள நடுவர் நிதின் மேனனை நோக்கி ஆத்திரத்துடன் 'ஐஸ் பேக்' (பனிக்கட்டி பை) ஒன்றை வீசினார். இது ஐபிஎல் நடத்தை விதிகளை மீறிய செயலாகும்.

போட்டி கட்டணத்தில் அபராதம்
இதையடுத்து, போட்டி நடுவர் ஜவகல் ஸ்ரீநாத் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது. தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட டிம் டேவிட்டுக்கு, போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், 2 டிமெரிட் புள்ளிகளும் வழங்கப்பட்டன.
டிம் டேவிட் இந்த சீசனில் நடத்தை விதிகளை மீறுவது இது மூன்றாவது முறையாகும். ஏற்கனவே லீக் சுற்றின் 20-வது போட்டி மற்றும் 54-வது போட்டியின் போது அவர் டிமெரிட் புள்ளிகளைப் பெற்றிருந்தார். தற்போது இறுதிப்போட்டியில் பெற்ற 2 புள்ளிகளையும் சேர்த்து மொத்தம் 5 டிமெரிட் புள்ளிகளை அவர் பெற்றுள்ளார். ஐபிஎல் விதிமுறைப்படி 5 டிமெரிட் புள்ளிகளைப் பெறும் வீரருக்கு ஒரு போட்டி விளையாட தடை விதிக்கப்படும்.
அடுத்த சீசனில் தடை
இதன் காரணமாக, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 2027 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் டிம் டேவிட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர் அடுத்த ஆண்டு எந்த அணிக்காக விளையாடினாலும் இந்தத் தடை பொருந்தும் என பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த சீசனில் ஆர்சிபி அணியின் வெற்றிக்கு டிம் டேவிட் ஃபினிஷராக மிக முக்கியப் பங்காற்றினார். அவர் 188.27 என்ற சிறந்த ஸ்டிரைக் ரேட்டுடன் 305 ரன்கள் குவித்து அசத்தினார். ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக்கொண்ட கொண்டாட்டத்தில் இருக்கும் வேளையில், அவரது இந்தத் தடை ரசிகர்களுக்குச் சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது. மைதானத்தில் வீரர்கள் தங்களது ஆத்திரத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதற்கு இந்த நடவடிக்கை ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications
