பெங்களூரு: மும்பை அணியை வீழ்த்திய பின் பெங்களூரு அணியின் ஓய்வறையில் ஆர்சிபி வீரர்களின் கொண்டாட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
15 ஆண்டுகளாக கோப்பையை வெல்லவில்லை என்றாலும், சென்னை அணிக்கு இணையான ரசிகர்களை கொண்ட அணியாக ஆர்சிபி வலம் வந்துகொண்டிருக்கிறது. கிரிக்கெட்டில் வெற்றி, தோல்விகள் வந்துபோகும். ஆனால் ரசிகர்கள் என்றும் நிரந்திரன் என்று பழமொழிக்கு ஆர்சிபி அணி சிறந்த உதாரணம்.

ஆர்சிபி அணிக்காக ஆடும் ஒவ்வொரு வீரர்கள், அந்த அணியையும் வீரர்களையும் குடும்பமாகவே பார்ப்பார்கள். அதேபோல் ஆர்சிபி அணியை பிராண்ட் செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆர்சிபி நிர்வாகமும் புதிய யுக்திகளை செய்து வருகிறது.
16வது ஐபிஎல் சீசனில் நேற்று பெங்களூரு - மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது. இதில் ஆர்சிபி அணி 172 ரன்கள் இலக்கை 16.2 ஓவர்களில் சேஸ் செய்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆர்சிபி அணியின் இயக்குநராக மைக் ஹெசன் பொறுப்பேற்றதில் இருந்து ஆர்சிபி அணி தொடர்ந்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
அதுமட்டுமல்லாமல் நேற்றைய வெற்றியுடன் சேர்த்து 2020ஆம் ஆண்டு முதல் ஆர்சிபி அணி மொத்தமாக 26 வெற்றிகளை குவித்துள்ளது. வேறு எந்த அணியின் இந்த காலத்தில் இவ்வளவு வெற்றிகளை பெறவில்லை. இந்த நிலையில் தற்போது ஆர்சிபி அணி தனது பிராண்ட்டை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்ல பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளது.
மான்செஸ்டர் யுனைடெட், பார்சிலோனா உள்ளிட்ட கால்பந்து அணிகள் எப்போதும் தங்களுக்கு என்று ஒரு பாடலை உருவாக்குவார்கள். அதே யுக்தியை ஆர்சிபி அணி கிரிக்கெட்டில் புகுத்தியுள்ளது. நேற்று மும்பை அணியை வீழ்த்திய ஓய்வறையில் கூடிய ஆர்சிபி வீரர்கள் அனைவரும் இணைந்து இந்தப் பாடலை பாடியுள்ளனர். அப்போது விராட் கோலியை ஆர்சிபி கேப்டன் டூ பிளஸிஸ் தூக்கி கொண்டாடியுள்ளார். இதன் வீடியோ வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் ஆர்சிபி ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டு வருகிறது.

The Pants are red , The shirt is blue , The golden lion shining through , We are RCB, We are playing bold , Go to the final our own , A finer kit you will never see, A finer team there will never be,
Other teams don't bother me , I'm proud to be from RCB என்று ஒரே குரலில் ஆர்சிபி வீரர்கள் பாடியது கூஸ்பம்ப் உணர்வை கொடுக்கிறது. இதனை பகிர்ந்து ஆர்சிபி ரசிகர்கள் பலரும், ஆர்சிபி கோப்பையை ஏந்தும் நிமிடத்தில் ஒட்டுமொத்த மைதானமும் ஒரே குரலில் இந்தப் பாடலை பாடினால் எப்படி இருக்கும் என்று கற்பனைகளை பகிர்ந்து வருகின்றனர்.