ஜெட்டா: ஐபிஎல் தொடரில் எப்போதுமே பிளே ஆஃப் செல்லாது, கடைசி இடத்தில் இருக்கும் என கேலியும், கிண்டலையும் சந்தித்து வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 2025 ஐபிஎல் ஏலத்திலும் சொதப்பி கடைசி இடத்துக்கு சென்று உள்ளது. ஜியோ ஸ்டார் வல்லுனர்கள் ஏலத்தில் சிறப்பாக செயல்பட்ட அணிக்கான மதிப்பீட்டிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடைசி இடத்தை பிடித்து இருக்கிறது.
2025 ஐபிஎல் ஏலத்தில் சிறப்பாக செயல்பட்ட அணி எது? என ஏலத்தை ஒளிபரப்பிய ஜியோ ஸ்டார் நிறுவனம் முன்னாள் வீரர்களை வைத்து மதிப்பீடு செய்தது. அதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 10க்கு 8.8 மதிப்பீட்டைப் பெற்று முதல் இடத்தை பிடித்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7.4 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தை மட்டுமே பிடித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் 7.9 ரேட்டிங் பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்தது.

ஒவ்வொரு அணியும் பெற்ற ரேட்டிங் என்ன? இதில் ஆர்சிபி கடைசி இடத்தை பிடிக்க என்ன காரணம்? என்பது பற்றி பார்க்கலாம்.
ஐபிஎல் ஏலத்தில் அணிகளின் செயல்பாட்டுக்கான ஜியோ ஸ்டார் மதிப்பீடு :
டெல்லி கேப்பிடல்ஸ் - 8.8
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 8.2
மும்பை இந்தியன்ஸ் - 8
பஞ்சாப் கிங்ஸ் - 8
சென்னை சூப்பர் கிங்ஸ் - 7.9
குஜராத் டைட்டன்ஸ் - 7.9
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - 7.8
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 7.7
ராஜஸ்தான் ராயல்ஸ் - 7.7
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 7.4
இந்தப் பட்டியலில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதல் இடத்தைப் பிடிக்க முக்கிய காரணம் அந்த அணி குறைவான விலையில் சிறந்த வீரர்களை வாங்கியது தான். மேலும், அனைத்து விதமான தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் வீரர்கள் வாங்கப்பட்டு இருந்தனர். உதாரணத்திற்கு கே எல் ராகுலை 14 கோடிக்கு வாங்கியது டெல்லி அணி. மிட்செல் ஸ்டார்க்கை 11.75 கோடிக்கும், அதிரடி பேட்ஸ்மேன் ஜேக் பிரேசரை 9 கோடிக்கும் வாங்கியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை பல நல்ல வீரர்களை வாங்க முயன்றும், அதிக தொகை கையிருப்பில் இல்லாததால் வாங்க முடியாமல் போனது. மேலும். வேகப்பந்துவீச்சாளர்களை வாங்குவதில் சிஎஸ்கே சரியாக செயல்படவில்லை. அதனால், ஜியோ ஸ்டார் மதிப்பீட்டில் ஐந்தாம் இடத்தை பிடித்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி செய்த பெரிய தவறு அதிரடி பேட்ஸ்மேன் வில் ஜாக்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியால் 5.25 கோடிக்கு வாங்கப்பட்டபோது ஆர்டிஎம் பயன்படுத்தாமல் இருந்தது தான். அது மிகப்பெரிய விமர்சனத்தை சந்தித்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் ஆனந்த் அம்பானி எழுந்து வந்து ஆர்சிபி அதிகாரிகளை கட்டி அணைத்து ஆர்டிஎம் பயன்படுத்தாததற்கு நன்றி சொன்னார்.
இந்த ஏலத்தில் அந்த அளவுக்கு தான் இருந்தது ஆர்சிபி அணியின் செயல்பாடு. தங்கள் அணியில் இருந்து விடுக்கப்பட்ட முகமது சிராஜ், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோரை ஆர்டிஎம் பயன்படுத்தி வாங்கும் வாய்ப்பையும் கோட்டை விட்டது. அந்த அணி ஏலத்தில் வாங்கிய சில சிறந்த வீரர்கள் புவனேஸ்வர் குமார் - 10.75 கோடி, ஜோஷ் ஹேசல்வுட் - 12.50 கோடி, ஃபில் சால்ட் - 11.50 கோடி, லியம் லிவிங்ஸ்டன் - 8.75 கோடி.
IPL Auction: சிஎஸ்கே, ஆர்சிபி உட்பட 10 ஐபிஎல் அணிகளின் முழு வீரர்கள் லிஸ்ட்.. விலைப்பட்டியலுடன்!
மற்றபடி ஆர்சிபி அணி குளறுபடியாக வீரர்களை வாங்கியது. அந்த அணியில் தற்போது இடம் பெற்று இருக்கும் சிறந்த வீரர்களில் பலரும் வெளிநாட்டு வீரர்களாக உள்ளனர். அவர்களில் நான்கு பேர் மட்டுமே ஒரு போட்டியில் ஆட முடியும் என்பதால் அத்தனை வீரர்களை, பெரும் தொகை கொடுத்து வாங்கியது ஏன்? என்ற விமர்சனமும் உள்ளது. அதனாலேயே ஆர்சிபி அணி ஜியோ ஸ்டார் மதிப்பீட்டில் கடைசி இடத்தை பிடித்து உள்ளது.