பெங்களூரு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி நிர்வாகம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ரசிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் சுமார் 4.5 கோடி ரூபாய் செலவில் செயற்கை நுண்ணறிவு (AI) கேமராக்களைப் பொருத்த முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாகக் கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு (KSCA) ஆர்சிபி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகக் கடிதம் எழுதியுள்ளது.
சின்னசாமி மைதானம் முழுவதும் சுமார் 300 முதல் 350 AI கேமராக்களைப் பொருத்த ஆர்சிபி திட்டமிட்டுள்ளது. இதற்கான மொத்த செலவான ரூ.4.5 கோடியை ஆர்சிபி நிர்வாகமே ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது. இதற்காக குருகிராமைச் சேர்ந்த 'Staqu' என்ற தொழில்நுட்ப நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.

முக அடையாளம் (Facial Recognition): கூட்டத்தில் இருக்கும் நபர்களைத் துல்லியமாக அடையாளம் காணும்.
கூட்ட நெரிசல் கண்காணிப்பு: வரிசையில் நிற்பவர்களை ஒழுங்குபடுத்துவதற்கும், அனுமதியின்றி நுழைபவர்களைக் கண்டறியவும் உதவும்.
உடனடி அலர்ட்: மைதானத்தில் வன்முறை சம்பவங்கள் அல்லது தேவையற்ற ஊடுருவல்கள் நடந்தால், உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் கொடுக்கும்.
ஆர்சிபி நிர்வாகம் இவ்வளவு பெரிய தொகையைச் செலவழிக்கக் காரணம், கடந்த ஆண்டு நிகழ்ந்த ஒரு துயரச் சம்பவம்தான். ஆர்சிபி அணியின் வெற்றிப் பேரணியின் போது, சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட பயங்கரமான கூட்ட நெரிசலில் சிக்கி 11 அப்பாவி ரசிகர்கள் உயிரிழந்தனர். இந்திய விளையாட்டு வரலாற்றிலேயே இது ஒரு கறுப்பு நாளாகப் பார்க்கப்படுகிறது.
இனி வருங்காலங்களில் அப்படி ஒரு சம்பவம் நடந்துவிடக்கூடாது என்பதற்காகவே, இந்த அதிநவீன பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆர்சிபி கையில் எடுத்துள்ளது.
பாதுகாப்பை மேம்படுத்த ஆர்சிபி இவ்வளவு மெனக்கெட்டாலும், ஐபிஎல் 2026 போட்டிகள் சின்னசாமி மைதானத்தில் நடக்குமா என்பது சந்தேகம்தான். கடந்த ஆண்டு நடந்த விபத்து காரணமாக, அதிக கூட்டம் கூடும் நிகழ்ச்சிகளுக்கு இந்த மைதானம் தகுதியற்றது என அரசு ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
இதன் காரணமாகவே, 2025 மகளிர் உலகக்கோப்பை மற்றும் 2026 டி20 உலகக்கோப்பை போட்டிகள் இங்கிருந்து மாற்றப்பட்டன. எனவே, வரும் ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணி தனது சொந்த மைதான போட்டிகளை ராய்ப்பூர் அல்லது புனேவில் விளையாடவே அதிக வாய்ப்புகள் உள்ளன.