பெங்களூரு : 2024 ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய போட்டியாக பார்க்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு முன் ஒரு விஷயத்தில் பெங்களூரு அணி முன்னிலை பெற்றுள்ளது.
அதாவது இந்த இரண்டு அணிகளில் எந்த அணிக்கு சமூக ஊடகங்களில் அதிக ஆதரவு உள்ளது என்ற புள்ளிவிவரம் ஒன்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கிறது இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு இந்தியா முழுவதும் அதிக அளவில் உள்ளது. இந்தப் போட்டியில் வெல்லும் அணி 2024 ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பதால் இந்த எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த நிலையில் தான் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அந்த புள்ளி விவரத்தை வெளியிட்டு இருக்கிறது. அதில் இந்தியா முழுவதும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு சமூக ஊடகங்களில் அதிக ஆதரவு இருப்பது போன்ற இந்திய வரைபடம் வெளியிடப்பட்டு இருக்கிறது. சுமார் 30 சதவீத இடங்களில் மட்டுமே சிஎஸ்கே அணிக்கு ஆதரவு இருப்பது போல அந்த வரைபடம் காட்டுகிறது.
இதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இந்தியா முழுவதும் ஆதரவு இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இதுவரை ஐபிஎல் கோப்பை வெல்லாதபோதும் பெங்களூரு அணிக்கு சமூக ஊடகங்களில் அதிக ஆதரவு எப்போதுமே இருக்கும். அதுதான் எப்போதும் நடந்துள்ளது. குறிப்பாக விராட் கோலிக்கு பல இளம் தலைமுறை ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் பலரும் சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்தும் நபர்கள் என்பதால் அந்த அணிக்கு அதிக ஆதரவு இருப்பதாக புள்ளி விவரம் காட்டப்பட்டுள்ளது.
இந்த புள்ளி விவரத்திற்கு எதிராக சிஎஸ்கே ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பொங்கி வருகின்றனர். போட்டியின் போது சிஎஸ்கே அணி ரசிகர்களே மைதானத்தில் அதிக அளவில் இருப்பார்கள் எனவும், போட்டிக்கு முன் எந்த அணிக்கு ஆதரவு இருக்கிறது என்பது முக்கியமில்லை. போட்டியில் யார் வெல்கிறார்கள்? என்பது தான் முக்கியம் என சிஎஸ்கே ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும், தோனி போட்டியில் பேட்டிங் இறங்கினால் பெங்களூரு அணியின் சமூக ஊடக ஆதரவு எல்லாம் தூள், தூளாக போய்விடும் எனவும் மார்தட்டி வருகின்றனர்.