RCB vs CSK: ரஜத், டிம் டேவிட் மரண அடி.. சிஎஸ்கே பவுலிங்கை துவம்சம் செய்து 250 ரன்கள் குவிப்பு
பெங்களூர்: 2026 ஐபிஎல் தொடரின் 11-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 250 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் முடிவு தவறாக அமைந்தது.
பெங்களூரு மைதானத்தில் எளிதாக ரன் மழை பொழியலாம் என்பதை நிரூபிக்கும் வகையில் ஆர்சிபி பேட்ஸ்மேன்கள் தொடக்கம் முதலே அதிரடியில் இறங்கினர். தொடக்க வீரராக களம் இறங்கிய விராட் கோலி 18 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து அன்ஷுல் கம்போஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான பிலிப் சால்ட் 30 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்தார்.

இதனைத் தொடர்ந்து வந்த தேவதத் படிக்கல் 29 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 50 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். ஆனால், நிஜமான ஆட்டம் அதன் பிறகுதான் தொடங்கியது. கேப்டன் ரஜத் படிதார் மற்றும் அதிரடி மன்னன் டிம் டேவிட் ஜோடி சிஎஸ்கே பந்துவீச்சை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்தது.
ருதுராஜ் கெய்க்வாட் என்ன முயன்றும் ஆர்சிபியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை. ரஜத் படிதார் வெறும் 19 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 48 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுபுறம் டிம் டேவிட் விஸ்வரூபம் எடுத்தார். அவர் எதிர்கொண்ட 25 பந்துகளில் 8 இமாலய சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் விளாசி மிரட்டினார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 280 ஆகும். இருவரும் இணைந்து 5-வது விக்கெட்டுக்கு வெறும் 35 பந்துகளில் 99 ரன்கள் சேர்த்தனர்.
சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் இந்தப் போட்டியில் படுமோசமாக ரன்களை வாரி வழங்கினர். அன்ஷுல் கம்போஜ் 4 ஓவர்களில் 52 ரன்களும், நூர் அகமது 49 ரன்களும் கொடுத்தனர். ஜேமி ஓவர்டன் 3 ஓவர்களில் 42 ரன்களை விட்டுக்கொடுத்தார். சிவம் துபே ஒரு விக்கெட் எடுத்த போதும் 2 ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்தார். கலீல் அகமது மட்டுமே 37 ரன்கள் கொடுத்து ஓரளவு கட்டுக்கோப்பாக பந்துவீசினார். 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி 3 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் குவித்தது.


Click it and Unblock the Notifications