பெங்களூர்: ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற ஐபிஎல் 2026-ன் 11வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 250 ரன்கள் குவித்து வரலாற்றுச் சாதனை படைத்தது. சிஎஸ்கே அணி தனது ஐபிஎல் பயணத்தைத் தொடங்கிய நாள் முதல், ஒரு போட்டியில் 250 ரன்களை விட்டுக் கொடுப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆனால், சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி பேட்ஸ்மேன்கள் ரன் வேட்டையில் ஈடுபட்டனர். குறிப்பாக டிம் டேவிட் வெறும் 25 பந்துகளில் 70 ரன்களும், தேவதத் படிக்கல் 29 பந்துகளில் 50 ரன்களும் விளாசித் தள்ளினர். ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் சேர்த்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏப்ரல் 19, 2008 அன்று தனது முதல் ஐபிஎல் போட்டியை விளையாடியது. அன்று முதல் கடந்த 18 சீசன்களாக ஒரு போட்டியில் கூட சிஎஸ்கே அணி 250 ரன்களை எதிரணிக்கு விட்டுக்கொடுத்தது இல்லை. ஆனால் 6561 நாட்களுக்குப் பிறகு ஆர்சிபி அந்தச் சாதனையை உடைத்துள்ளது. அதாவது 2008ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி முதல் போட்டியில் ஆடத் துவங்கி மொத்தம் 6561 நாட்கள் ஆகின்றன. இத்தனை நாட்களில் சிஎஸ்கே அணி எந்த அணியையும் 250 ரன்களை எடுக்க விட்டதில்லை.
இதற்கு முன் 2014-ல் பஞ்சாப் அணி மற்றும் 2024-ல் குஜராத் அணி 231 ரன்கள் எடுத்ததே சிஎஸ்கே-வுக்கு எதிராக அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
250/3 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (2026)
231/4 - பஞ்சாப் கிங்ஸ் (2014)
231/3 - குஜராத் டைட்டன்ஸ் (2024)
226/6 - பஞ்சாப் கிங்ஸ் (2014)
223/5 - ராஜஸ்தான் ராயல்ஸ் (2010)
ஆர்சிபி அணிக்கு இது ஐபிஎல் வரலாற்றில் 3வது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோராக 2013-ல் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக எடுக்கப்பட்ட 263 ரன்கள் இன்றும் முதலிடத்தில் உள்ளது. கிறிஸ் கெய்ல் அந்தப் போட்டியில் 175 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

251 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய சிஎஸ்கே, 19.4 ஓவர்களில் 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் இந்த சீசனில் விளையாடிய 3 போட்டிகளிலும் சிஎஸ்கே தோல்வியைத் தழுவியுள்ளது. பந்துவீச்சில் சென்னை அணி காட்டிய மெத்தனமே இந்த இமாலய ரன் குவிப்பிற்கு முக்கியக் காரணமாக அமைந்தது. ஆர்சிபி அணியின் அதிரடி ஆட்டம் பெங்களூரு ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது.