பெங்களூர்: துபாய் கேபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு கோப்பையை கைப்பற்றிய பின், ஐபிஎல் தொடரில் யாராவது பேட்டிங் பயிற்சியாளராக அழைப்பு விடுப்பார்கள் என்று நினைத்திருந்ததாக ஹேமங் பதானி தெரிவித்துள்ளார். ஆனால் டெல்லி அணியின் நிர்வாகம் தரப்பில் தலைமை பயிற்சியாளர் வாய்ப்பு அளிக்கப்பட்டது இன்ப அதிர்ச்சியாக இருந்ததாக கூறிய அவர், செயல்பாடுகள் தனது திறமையை நிரூபிக்க காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 24வது லீக் போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்த்து பலம் வாய்ந்த டெல்லி அணி களமிறங்கவுள்ளது. இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் இருப்பதால், எந்த அணி வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே டெல்லி அணியின் திடீர் வளர்ச்சி ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆச்சரியத்தையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் டெல்லி அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஹேமங் பதானி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன்பின் டெல்லி அணி அபாரமான வெற்றிகளை பெற்று வருகிறது. டெல்லி அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஹேமங் பதானி பொறுப்பேற்பதற்கு முன்பாக, அவரின் சாதனைகள் பலருக்கும் தெரியாத ஒன்றாகும்.
ஏனென்றால் அவர் டிஎன்பிஎல் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பயிற்சியாளராகதான் பாதையை தொடங்கினார். அங்கிருந்து சில காலம் வர்ணனையாளராக செயல்பட்ட அவர், ஐதராபாத் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக சில காலம் பணியாற்றினார். இதனைத் தொடர்ந்து லங்கா பிரீமியர் லீக் தொடரில் ஜஃப்னா கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக கோப்பையை வென்று கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து எஸ்ஏ20 லீக் தொடரில் பேட்டிங் பயிற்சியாளராக 2 முறை கோப்பையை வென்றார். இதன்பின்னர் டெல்லி அணியின் மற்றொரு அணியான துபாய் கேபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஒரே ஆண்டில் கோப்பையை வென்றார் ஹேமங் பதானி. இத்தனை சாதனைகளை செய்த பின்னரே டெல்லி அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பு அவருக்கு கிடைத்துள்ளது.
இதுகுறித்து ஹெமங் பதானி பேசுகையில், துபாய் கேபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கோப்பையை வென்ற பின் பலரும் பாராட்டினார்கள். அதன்பின் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் ஐபிஎல் தொடரில் ஏதாவது அணி நிர்வாகம் தரப்பில் பேட்டிங் பயிற்சியாளராக அழைப்பார்கள் என்றுதான் நினைத்திருந்தேன்.
ஆனால் டெல்லி அணியின் நிர்வாகம் தரப்பில் உங்களை தலைமைப் பயிற்சியாளராக்க ஆலோசித்து வருகிறோம். அதனைப் பற்றி உங்களின் கருத்து என்ன என்று கேட்டார்கள். அதற்கு என் தரப்பில் பதில் அளிக்கப்பட்ட பின், டெல்லி உரிமையாளர்கள் ஆலோசித்தனர். அதன்பின் டெல்லி தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பு கிடைத்தது.
என்னை பொறுத்தவரை எந்த சூழலிலும் நிதானமாக செயல்பட வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த அணியை வீழ்த்துவோம், அந்த அணியை வீழ்த்துவோம் என்றெல்லாம் சொல்லப் போவதில்லை. எங்களின் செயல்பாடுகள் மூலமாக பதில் அளிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த ஹேமங் பதானி டெல்லி அணியின் பயிற்சியாளராக அடுத்தடுத்து வெற்றிகளை பெறுவது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.