பெங்களூர்: 2025 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிய 24-வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அந்த அணி ஆரம்பத்திலேயே விக்கெட்களை இழந்து ரன் குவிக்க முடியாமல் திணறியது. அடுத்ததாக ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 58 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 4 விக்கெட்களை இழந்து மோசமான நிலையில் இருந்தது. அப்போது கே.எல். ராகுல் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இணைந்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று தங்கள் அணியை வெற்றி பெற வைத்தனர். அவர்கள் 111 ரன்களுக்கு கூட்டணி அமைத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றது.

கே.எல். ராகுல் மட்டுமே தனி ஆளாக 53 பந்துகளில் 93 ரன்கள் சேர்த்திருந்தார். ராகுல் ஆடிய அதிரடி ஆட்டத்தால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விக்கெட் சரிவில் இருந்து மீண்டு வந்து இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் துவக்க வீரர் ஃபில் சால்ட் அதிரடியாக விளையாடினார். அவர் 17 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்தார். நான்கு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களை அடித்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 217.65 ஆக இருந்தது.
ஆனால், அதற்குப் பின் வந்த வீரர்கள் வரிசையாக விக்கெட்களை இழந்தனர். விராட் கோலி 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தேவ்தத் படிக்கல் 8 பந்துகளை சந்தித்து ஒரு ரன் மட்டுமே எடுத்து ஏமாற்றமளித்தார். ரஜத் படிதார் 23 பந்துகளில் 25 ரன்கள் மட்டுமே எடுத்தார். லியாம் லிவிங்ஸ்டோன் 6 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜிதேஷ் ஷர்மா 11 பந்துகளை வீணடித்து 3 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
க்ருனால் பாண்டியா 18 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே எடுத்தார். கடைசி இரண்டு ஓவர்களில் டிம் டேவிட் அதிரடி ஆட்டம் ஆடினார். அவர் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்திருந்தார். இரண்டு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்களை விளாசினார். டிம் டேவிட் ஆடிய ஆட்டத்தால் 19 வது ஓவரில் 17 ரன்களும், 20 வது ஓவரில் 19 ரன்களும் சேர்த்து இருந்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. அவரது அதிரடி ஆட்டத்தால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 163 ரன்கள் எடுத்தது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பந்துவீச்சாளர்களில் விப்ராஜ் நிஜாம் மற்றும் குல்தீப் யாதவ் அபாரமாக பந்து வீசினர். விப்ராஜ் நிஜாம் நான்கு ஓவர்களில் 18 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். குல்தீப் யாதவ் நான்கு ஓவர்களில் 17 ரன்களை விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார்.
முகேஷ் குமார் மூன்று ஓவர்களில் 26 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டையும், மோகித் சர்மா இரண்டு ஓவர்களில் 17 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். கேப்டன் அக்சர் படேல் மிக மோசமாக பந்து வீசினார். அவர் நான்கு ஓவர்களில் 52 ரன்களை வாரி இறைத்திருந்தார், விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. மிட்செல் ஸ்டார்க் 3 ஓவர்களில் 35 ரன்கள் கொடுத்திருந்தார், அவரும் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.
அடுத்து 164 ரன்கள் என்ற இலக்கை நோக்கி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஆடியது. அந்த அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். ஃபாஃப் டு பிளெசிஸ் 7பந்துகளில் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜேக் பிரேசர்-மெக்கர்க் 6 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அபிஷேக் போரல் 7 பந்துகளில் 7 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார்.
30 ரன்களுக்கு மூன்று விக்கெட்களை இழந்து மோசமான நிலையில் இருந்தது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி. அடுத்து கேப்டன் அக்சர் படேல் 11 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அந்த அணி 8.4 ஓவர்களில் நான்கு விக்கெட் இழந்து 58 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஒரு ஓவருக்கு 12 ரன்கள் எடுத்தால் மட்டுமே வெற்றி பெறலாம் என்ற சூழ்நிலை இருந்தது.
அப்போது கே.எல். ராகுல் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் களத்தில் இருந்தனர். இருவரும் முதலில் நிதானமாக ஆடத் துவங்கி பின்னர் வேகம் எடுத்தனர். கே.எல். ராகுல் இடையே அதிரடியின் உச்சத்தை எட்டினார். அவர் 53 பந்துகளில் 93 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஏழு பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்ஸர்களை விளாசினார்.
டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 23 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவர்கள் ஐந்தாவது விக்கெட்டுக்கு 111 ரன்களை சேர்த்தனர். இதை அடுத்து 17.5 ஓவர்களில் 169 ரன்கள் எடுத்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார் மற்றும் சுயாஷ் ஷர்மா மட்டுமே சிறப்பாக பந்து வீசினர். புவனேஸ்வர் குமார் 4 ஓவர்களில் 26 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்களை சாய்த்திருந்தார். சுயாஷ் ஷர்மா நான்கு ஓவர்களில் 25 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருந்தார்.
யாஷ் தயாள் ஒரு விக்கெட் வீழ்த்தினாலும் அவர் 3.5 ஓவர்களில் 45 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தார். மற்ற பந்துவீச்சாளர்களும் அதிக ரன்களை வாரி இறைத்திருந்தனர். ஜோஷ் ஹேசல்வுட் 3 ஓவர்களில் 40 ரன்கள் விட்டுக் கொடுத்து ஏமாற்றமளித்திருந்தார்.
பெங்களூரு அணி பேட்டிங் மற்றும் பவுலிங்கில் மிக மோசமாக செயல்பட்டு இந்த போட்டியில் தோல்வியடைந்தது. இதை அடுத்து புள்ளி பட்டியலில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நான்கு போட்டிகளில் நான்கு வெற்றிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த தோல்வியால் புள்ளிகளை இழந்தாலும் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடி அதில் மூன்று வெற்றிகள் மற்றும் இரண்டு தோல்விகளை சந்தித்து உள்ளது.