பெங்களூர்: 2025 ஐபிஎல் தொடரில் சொந்த மண்ணில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை ஆதிக்கம் செலுத்தி வீழ்த்தி இருக்கிறது குஜராத் டைட்டன்ஸ் அணி. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமே குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் தான். அந்த அணியில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா மற்றும் சாய் கிஷோர் ஆகியோர் அபாரமாக பந்து வீசினார்கள்.
ரன்களை அதிகம் விட்டுக் கொடுக்காமல் விக்கெட்டுகளையும் அள்ளினார்கள். அதிலும் முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் நான்கு ஓவர்களில் 19 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து இருந்தார். பிரசித் கிருஷ்ணா நான்கு ஓவர்களில் 26 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். சுழற் பந்துவீச்சாளரான தமிழகத்தை சேர்ந்த சாய் கிஷோர் 4 ஓவர்களில் 22 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் சாய்த்து இருந்தார்.

இந்த போட்டியில் விளையாடும் வாய்ப்பு பெற்ற அர்ஷத் கான் இரண்டு ஓவர்களில் 17 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தாலும், அவர் தான் வீசிய முதல் ஓவரிலேயே விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தி இருந்தார்.
இப்படி குஜராத் டைட்டன்ஸ் அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களும் தங்களின் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தினர். ரஷித் கான் மட்டுமே மிகப் பெரிய அளவில் ஏமாற்றம் அளித்தார். அவர் நான்கு ஓவர்களில் 54 ரன்களை வாரி இறைத்து இருந்தார். விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் விக்கெட்களை அள்ளினாலும் லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா மற்றும் டிம் டேவிட் ஆகிய மூவரின் ஆட்டத்தால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஓரளவுக்கு ரன்களை சேர்த்தது.
லிவிங்ஸ்டன் 40 பந்துகளில் 54 ரன்களும், ஜிதேஷ் சர்மா 21 பந்துகளில் 33 ரன்களும், டிம் டேவிட் 18 பந்துகளில் 32 ரன்களும் எடுத்து இருந்தனர். அடுத்து 170 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 17.5 ஓவர்களில் அந்த இலக்கை எட்டி வெற்றி பெற்றது. சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடி 36 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்தார்.
சுப்மன் கில் 14 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். ஜோஸ் பட்லர் அதிரடி ஆட்டம் ஆடினார். அவர் 39 பந்துகளில் 73 ரன்கள் சேர்த்தார். 5 ஃபோர் மற்றும் 6 சிக்ஸர்கள் அடித்திருந்தார். ஷெர்ஃபேன் ரூதர்போர்ட் 18 பந்துகளில் 30 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜோஸ் பட்லர் 73 ரன்கள் சேர்த்தது இருந்தாலும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட முகமது சிராஜுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.