RCB vs GT: முதல் குவாலிபையரில் நடந்ததை அப்படியே மறந்துவிடனும்! இந்த விசயத்தில் சொதப்பிவிட்டோம்- கில்
தர்மசாலா: ஐபிஎல் 2026 தொடரின் குவாலிஃபையர் 1 போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. தர்மசாலா இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 254/5 என்ற இமாலய இலக்கை எட்டியது. அதிரடியாக விளையாடிய ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் வெறும் 33 பந்துகளில் 93* ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தொடர்ந்து 255 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் பவர்பிளேயிற்குள்ளேயே வீழ்த்தினர். இம்பாக்ட் பிளேயராக வந்த ராகுல் தெவாட்டியா அரைசதம் அடித்து போராடிய போதிலும், குஜராத் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் ஆர்சிபி அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்தத் தோல்வி குறித்துப் பேசிய குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில், தர்மசாலா ஆடுகளத்தை (pitch) குறை கூற மறுத்துவிட்டார். ஆடுகளத்தின் தன்மை ஆச்சரியம் அளித்ததா என்ற கேள்விக்கு, "உண்மையில் இல்லை. நாங்கள் 12 அல்லது 13-வது ஓவர் வரை நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தோம். ஆனால் எங்களுடைய ஃபீல்டிங் தரம் வாய்ந்ததாக இல்லை. சில கேட்ச்களை தவறவிட்டோம், கிரவுண்ட் ஃபீல்டிங்கும் சரியாக அமையவில்லை" என்று கில் கூறினார்.
அழுத்தமான சூழ்நிலைகளைக் கையாள்வதில் ஏற்பட்ட சுணக்கமே இந்தத் தோல்விக்குக் காரணம் என்று குறிப்பிட்ட கில், "இதை நாங்கள் மறந்துவிட்டு, மொஹாலியில் புதிதாகத் தொடங்க விரும்பும் போட்டிகளில் ஒன்று. ஃபீல்டிங் தவறுகள் குறித்து நாங்கள் நிச்சயமாக அணி கூட்டங்களிலும், பயிற்சி அமர்வுகளிலும் விவாதிப்போம். இன்று எங்களுக்கான நாளாக அமையவில்லை. எங்களிடம் வேகம் இருந்தது, ஆனால் அழுத்தமான தருணங்களில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை" என்றார்.
இவ்வளவு பெரிய இலக்கை துரத்தும்போது நம்பிக்கையுடன் இருந்தீர்களா என்ற கேள்விக்கு, "ஆரம்பம் சிறப்பாக அமைவதைப் பொறுத்தது தான் எல்லாம். பவர்பிளேயில் நல்ல ரன்களை எடுத்திருந்தால், இந்த மைதானத்தில் பந்து வேகமாகச் செல்லும் என்பதால் எந்த இலக்கையும் துரத்திப் பிடித்திருக்க முடியும்" என்று விளக்கினார்.
மேலும், துரதிர்ஷ்டவசமான முறையில் ஆட்டமிழந்த சாய் சுதர்சனின் விக்கெட் குறித்துப் பேசிய கில், "ஆமாம், இது போன்ற அவுட்களை நீங்கள் அடிக்கடி பார்க்க முடியாது. அது மிகவும் துரதிர்ஷ்டவசமானது" என்று முடித்தார். குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப்போட்டிக்குச் செல்ல தங்களுக்குக் கிடைக்கும் இரண்டாவது வாய்ப்பைப் பயன்படுத்த, அடுத்ததாக மொஹாலியில் நடக்கவிருக்கும் குவாலிஃபையர் 2 போட்டியில் விளையாடவுள்ளது.


Click it and Unblock the Notifications

