RCB vs GT: ஆர்சிபி - குஜராத் டைட்டன்ஸ் ஆடும் முதல் குவாலிபையர் போட்டியில் வென்றால் பைனல்.. தோற்றால்?
தரம்சாலா: 2026 ஐபிஎல் தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் முதல் குவாலிபையர் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலாவில் உள்ள எச்.பி.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, மே 31-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ள இறுதிப்போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறும். தோல்வி அடையும் அணிக்கு இறுதிப்போட்டிக்குச் செல்ல மற்றொரு வாய்ப்பாக, மே 29 அன்று சண்டிகரில் நடைபெறும் இரண்டாவது குவாலிபையர் போட்டியில் விளையாட வேண்டியிருக்கும்.
நடப்பு சீசனில் இரு அணிகளுமே தலா 14 போட்டிகளில் விளையாடி 9 வெற்றிகள் பெற்று, 18 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளன. இருப்பினும், ரன் ரேட் அடிப்படையில் பெங்களூரு முதலிடத்தையும், குஜராத் இரண்டாம் இடத்தையும் பிடித்து குவாலிபையர் 1 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

கடந்த ஆண்டு 18 ஆண்டுகால காத்திருப்புக்குப் பின் சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு அணி, ரஜத் படிதார் தலைமையில் மீண்டும் கோப்பையைத் தக்கவைக்கும் முனைப்பில் உள்ளது. மறுபுறம், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, தனது கோட்டையான அகமதாபாத் மைதானத்திற்கு நேரடியாகச் செல்லத் துடிக்கிறது.
இந்தப் போட்டியின் முக்கிய ஈர்ப்பாக 'கிங்' கோலி மற்றும் 'பிரின்ஸ்' கில் இடையேயான மோதல் அமையும். குஜராத் கேப்டன் கில் 13 போட்டிகளில் 616 ரன்களுடன் இந்த சீசனில் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். விராட் கோலி 14 போட்டிகளில் 557 ரன்களைக் குவித்து சிறப்பான ஃபார்மில் உள்ளார்.
தரம்சாலா ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமானது என்பதால், இரு அணிகளின் வேகப்பந்து வீச்சாளர்களிடையே கடும் போட்டி நிலவும். பெங்களூரு அணியில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி ஊதா நிறத் தொப்பியை தன்வசம் வைத்துள்ள புவனேஷ்வர் குமார் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் பலமாக உள்ளனர். இதற்குப் பதிலடியாக குஜராத் அணியில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ககிசோ ரபாடா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் மிரட்டத் தயாராக உள்ளனர்.
தரம்சாலாவில் மாலை நேரத்தில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால், டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்யவே அதிக வாய்ப்புள்ளது. ரன் மழை பொழியும் இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் 187 ஆக உள்ளது. பெங்களூரு அணியில் காயத்தில் இருந்து மீண்ட அதிரடி வீரர் பில் சால்ட் மீண்டும் களம் இறங்க வாய்ப்புள்ளது. நட்சத்திர வீரர்களின் அணிவகுப்பால் இன்றைய ஆட்டம் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications
