RCB: வெற்றி பெற்றும் விராட் கோலி வருத்தம்.. குஜராத் அணி பயிற்சியாளரிடம் சொன்ன அந்த விஷயம்!
பெங்களூர்:2026 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது சொந்த மண்ணில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது நட்சத்திர வீரர் விராட் கோலியின் அதிரடி ஆட்டம் தான். 206 ரன்கள் என்ற இமாலய இலக்கை ஆர்சிபி அணி மிக எளிதாக எட்டிய போதிலும், களத்தில் சிங்கமாக கர்ஜித்த விராட் கோலி போட்டியின் முடிவில் மிகுந்த வருத்தத்தில் காணப்பட்டார். வெற்றிக்கு பின் எதிரணியான குஜராத் அணியின் உதவி பயிற்சியாளரிடம் அவர் தனது பெருத்த ஏமாற்றத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயித்த 206 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணிக்கு விராட் கோலி ஒரு மிகச்சிறந்த அடித்தளத்தை அமைத்து கொடுத்தார். ஆரம்பம் முதலே பந்துவீச்சாளர்களை திணறடித்த அவர் 44 பந்துகளை மட்டுமே சந்தித்து 8 பவுண்டரிகள் மற்றும் 4 வானளாவிய சிக்சர்களுடன் 81 ரன்களை விளாசி தள்ளினார்.

3வது விக்கெட்டுக்கு தேவ்தத் படிக்கல் உடன் இணைந்து 115 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். அவர் சுலபமாக சதம் அடிப்பார் என மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், ஆட்டத்தின் வேகத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சில் கோலி எதிர்பாராதவிதமாக தனது விக்கெட்டை பறிகொடுத்தார். முடிவில் ஆர்சிபி அணி 7 பந்துகள் மீதமிருக்க 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றியை ருசித்தது.
போட்டி முடிந்த பின், குஜராத் அணியின் உதவி பயிற்சியாளர் விஜய் தாஹியாவிடம் கோலி பேசிக் கொண்டிருந்தார். அப்போது கோலி, இந்த சிறப்பான ஆட்டத்தை சதமாக மாற்றாமல் 81 ரன்களில் ஆட்டமிழந்தது தனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக வெளிப்படையாக புலம்பியுள்ளார். ஒருவேளை சதமடித்திருந்தால் அது ஐபிஎல் தொடரில் கோலியின் 9வது சதமாக அமைந்திருக்கும்.
கோலியின் வருத்தம் குறித்து விஜய் தாஹியா செய்தியாளர்களிடம் கூறுகையில், "கோலியின் ஆற்றலும், ஆட்டத்தின் மீதான அவரது புரிதலும் வியக்க வைக்கிறது. பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளத்தை கூட அவர் மிகவும் எளிதாக மாற்றிவிட்டார். உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களையும் தனக்கு ஏற்றவாறு பந்துவீச வைக்கும் அசாத்திய திறமை அவரிடம் மட்டுமே உள்ளது. விக்கெட்டுகளுக்கு இடையே மிக வேகமாக ஓடி ரன் சேர்க்கும் அவர், அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக உத்வேகம் அளிக்கிறார்" என புகழ்ந்து தள்ளியுள்ளார்.
குஜராத் அணிக்கு எதிரான இந்த அசத்தல் வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு அடுத்தபடியாக 2வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. வெற்றி நடையை தொடரும் ஆர்சிபி அணி, தனது அடுத்த ஆட்டத்தில் வரும் திங்களன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.


Click it and Unblock the Notifications
