அது அப்படிதான்.. ஐபிஎல்லுக்கும் கோலிக்கும் ஒத்து வராது.. ஆதாரம் வேணும்னா பார்த்துக்குங்க!
பெங்களூர் : விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன். ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர். ஆனால், அவர் ஐபிஎல்-இன் மிக மோசமான ஒரு சாதனையையும் தன் வசமாக்கி அதிர வைத்துள்ளார்.
2019 ஐபிஎல் தொடரில் விராட் கோலி முக்கியமான இரண்டு சாதனைகளை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடந்தார் அவை, ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் மற்றும் டி20 போட்டிகளில் 8000 ரன்களை கடந்த இரண்டாவது இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனைகள்.

அதிக தோல்விகள்
அதோடு சேர்த்து ஐபிஎல் தொடரில் அதிக தோல்விகளை சந்தித்த வீரர் என்ற மோசமான சாதனையையும் செய்தார். கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் கோலி 84 ரன்கள் அடித்தார். பெங்களூர் 205 ரன்கள் குவித்தது. இருந்தும், கொல்கத்தா அணியிடம் தோல்வி அடைந்தது பெங்களூர். இந்த தோல்வியுடன் இதுவரை 86 ஐபிஎல் போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளார் விராட் கோலி.

மோசமான கேப்டன்
கோலி துவக்கம் முதலே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக மட்டுமே ஆடி வருகிறார். அந்த அணிக்கு நீண்ட காலம் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். எனவே, இந்த 86 போட்டி தோல்விகளில் கேப்டனாக பல போட்டிகளில் தோல்விக்கு காரணமாகவும் இருந்துள்ளார் கோலி. ஐபிஎல் போட்டி என்றாலே கோலிக்கு ஒத்து வராது என்பது போல இந்த தோல்விகள் அமைந்துள்ளன.

நல்ல கேப்டனா?
கோலி சிறந்த பேட்ஸ்மேன், ஆனால், நல்ல கேப்டன் இல்லை என்ற விமர்சனத்துக்கு சிறந்த உதாரணமாக மாறி உள்ளது இந்த 86 தோல்விகள். கோலி அதிக ரன்கள் குவித்தும் அவர் அணி தோற்று வருவது ஏன்? மோசமான கேப்டன்சி தான் காரணமா? இருந்தாலும், பெங்களூர் அணி தொடர்ந்து கோலி தலைமையில் இயங்க முடிவு செய்திருப்பதும் ஆச்சரியமான ஒன்று தான்.

கோலிக்கு அடுத்து..
கோலிக்கு அடுத்து அதிக ஐபிஎல் போட்டி தோல்விகளை சந்தித்துள்ளவர் கொல்கத்தா அணியின் ராபின் உத்தப்பா (85 தோல்விகள்). அடுத்தடுத்த இடங்களில் ரோஹித் சர்மா (81 தோல்விகள்), தினேஷ் கார்த்திக் (79 தோல்விகள்) சந்தித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications