RCB vs LSG: 4 விக்கெட் அள்ளிய ஆர்சிபி பவுலர் ரசிக் தார்.. சுருண்ட லக்னோ அணி.. 150 ரன்களை கூட தாண்டலை
பெங்களூர்: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 23-வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தினர்.
டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ் மற்றும் எய்டன் மார்க்ரம் களம் இறங்கினர். மார்க்ரம் 12 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். நிதானமாக ஆடிய மிட்செல் மார்ஷ் 32 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்தார். இதில் 3 பவுண்டரிகளும் 2 சிக்சர்களும் அடங்கும்.

நட்சத்திர வீரர்கள் சொதப்பல்
லக்னோ அணியின் நம்பிக்கையாகக் கருதப்பட்ட நட்சத்திர பேட்டர்கள் இந்தப் போட்டியில் வரிசையாக ஏமாற்றம் அளித்தனர். கேப்டன் ரிஷப் பண்ட் 6 பந்துகளைச் சந்தித்து வெறும் 1 ரன்னில் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் காயம் காரணமாக இடையே ஆடுகளத்தை விட்டு வெளியேறி விட்டு பின்னர் விக்கெட் வீழ்ச்சியால் அடுத்த சில ஓவர்களில் மீண்டும் பேட்டிங் செய்ய வந்தார். ஆனாலும், ஏமாற்றமே மிஞ்சியது. அதேபோல் அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் 1 ரன்னிலும், அப்துல் சமத் ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். இதனால் லக்னோ அணி 83 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
மீட்டெடுத்த பதோனி - முகுல்
ஒரு கட்டத்தில் 100 ரன்களைக் கூட தாண்டாது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இளம் வீரர் ஆயுஷ் பதோனி மற்றும் முகுல் சவுத்ரி ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. அதிரடியாக ஆடிய பதோனி 24 பந்துகளில் 38 ரன்கள் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார். இவருக்குப் பின் வந்த முகுல் சவுத்ரி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 28 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால், லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 146 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
ஆர்சிபி பந்துவீச்சு அபாரம்
பெங்களூரு அணி தரப்பில் இளம் வேகப்பந்து வீச்சாளர் ரசிக் சலாம் தார் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தனது 4 ஓவர்களில் அவர் 24 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அனுபவ வீரர் புவனேஷ்வர் குமார் 4 ஓவர்களில் 27 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குருணால் பாண்டியா 2 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹேசில்வுட் 1 விக்கெட்டையும் சாய்த்தனர்.


Click it and Unblock the Notifications