IPL: ஈவு இரக்கமே இல்லாமல் லக்னோ அணியை ஓட ஓட விரட்டிய ஆர்சிபி.. இம்பாக்ட் பிளேயராக சிதறடித்த கோலி
பெங்களூரு: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 23-வது லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. 147 ரன்கள் என்ற இலக்கை வெறும் 15.1 ஓவர்களில் எட்டிப்பிடித்த ஆர்சிபி, லக்னோ அணியை நிலைகுலையச் செய்தது. இம்பாக்ட் வீரராக வந்த விராட் கோலி சிறப்பாக ஆடினார்.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. புவனேஷ்வர் குமார் மற்றும் ரசிக் சலாம் தார் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அந்த அணியின் முன்னணி வீரர்கள் வரிசையாக விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

கேப்டன் ரிஷப் பண்ட் 1 ரன்னிலும், அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி அளித்தனர். மிட்செல் மார்ஷ் விளாசிய 102 மீட்டர் மெகா சிக்ஸர் மட்டுமே லக்னோ ரசிகர்களுக்கு ஒரே ஆறுதலாக அமைந்தது. அவர் 40 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஆயுஷ் பதோனி (38) மற்றும் முகுல் சவுத்ரி (39) ஆகியோரின் போராட்டத்தால் லக்னோ அணி 20 ஓவர்களில் 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ஆர்சிபி தரப்பில் ரசிக் தார் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அனுபவ வீரர் குருணால் பாண்டியா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஐபிஎல் வரலாற்றில் 100 விக்கெட்டுகள் மற்றும் 1000 ரன்கள் எடுத்த 3-வது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
இம்பாக்ட் பிளேயராக கோலி அதிரடி
147 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூரு அணிக்கு 'இம்பாக்ட் பிளேயராக' களம் இறங்கிய விராட் கோலி ருத்ரதாண்டவம் ஆடினார். காலில் காயம் இருந்தபோதிலும், அதைப் பொருட்படுத்தாமல் லக்னோ பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவர் 34 பந்துகளில் 49 ரன்கள் (6 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து அவுட் ஆனார்.
அவருக்குத் துணையாக ஆடிய கேப்டன் ரஜத் படிதார் 13 பந்துகளில் 27 ரன்களும் (ஸ்ட்ரைக் ரேட் 207), ஜித்தேஷ் சர்மா 9 பந்துகளில் 23 ரன்களும் (ஸ்ட்ரைக் ரேட் 255) விளாசி ஆட்டத்தின் போக்கை மாற்றினர். ஆர்சிபி வீரர்கள் ஈவு இரக்கமே இல்லாமல் பந்தை மைதானத்தின் நாலாபுறமும் பறக்கவிட்டனர். லக்னோ பந்துவீச்சாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நின்றனர்.
இறுதியில் டிம் டேவிட் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோர் தலா 14 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்து வைத்தனர். 15.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதால் ஆர்சிபி அணியின் ரன் ரேட் எகிறியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பந்துவீச்சில் மிரட்டிய ரசிக் தார் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். சொந்த மண்ணில் ஆர்சிபி படைத்த இந்த இமாலய வெற்றி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications