பெங்களூர்: சின்னச்சாமி மைதானத்தில் ஆர்சிபி அணி வெற்றிபெற வேண்டும் என்றால், டாப் 5 பேட்ஸ்மேன்களில் ஒருவர் நிலையாக நின்று 20 ஓவர்களும் விளையாட வேண்டும் என்று அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட் தெரிவித்துள்ளார். சின்னச்சாமி பிட்சில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறிய அவர், எதிரணியில் ஒரு வீரர் நிலையாக ஆடுவது தொடர்ந்து வருவதாகவும் கூறியுள்ளார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது. சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற 3வது போட்டியிலும் ஆர்சிபி அணி தோல்வியை சந்தித்திருப்பது அந்த அணியின் ரசிகர்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் இந்த சீசனில் சொந்த மண்ணில் வெல்லாத ஒரே அணி ஆர்சிபி மட்டும்தான்.

அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றில் சொந்த மண்ணில் அதிக போட்டிகளில் தோல்வியை சந்தித்த அணியும் ஆர்சிபி தான். அந்நிய மண்ணில் அடுத்தடுத்து வெற்றிகளை பெறும் ஆர்சிபி சொந்த மண்ணில் தோல்வியை சந்திப்பது, வரும் நாட்களில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் சின்னச்சாமி மைதானத்தில் ஆர்சிபி அணி தோல்வியடைவது ஏன் என்று ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பஞ்சாப் அணியுடனான தோல்விக்கு பின் ஆர்சிபி அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட் பேசுகையில், சின்னச்சாமி மைதானத்தில் எந்த மாற்றமும் இல்லை. வழக்கமாக இருக்கும் பவுன்ஸ் இப்போதும் இருக்கிறது. அதுதான் கன்சிஸ்டன்சியுடன் இருக்கிறது. இந்த பிட்சில் 6 முதல் 8 மீட்டர் இடையிலான லெந்தில் பிட்ச் செய்தால், பேட்ஸ்மேன்களால் ரன்கள் சேர்க்க முடியாது.
அதனை இந்த சீசனில் கண்டறிந்துவிட்டோம். கடந்த 2 போட்டிகளில் ஆர்சிபி அணி தோல்வியடைந்ததற்கு, எதிரணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் பெரிய ஸ்கோரை அடித்தது ஒரு காரணம். அதேபோல் பார்ட்னர்ஷிப்பை பிரிக்கவும், டெத் ஓவர்களில் கட்டுப்படுத்தவும் தவறிவிட்டோம். அதேபோல் ஆர்சிபி அணியின் டாப் 5 பேட்ஸ்மேன்களில் ஒருவர், 20 ஓவர்களும் நின்று விளையாட வேண்டும்.
அப்படி செய்தால், சொந்த மண்ணிலும் வெல்வோம் என்று தெரிவித்துள்ளார். நேற்றைய ஆட்டத்தில் ஆர்சிபி அணியின் தோல்விக்கு கேப்டன் ரஜத் பட்டிதாரும் ஒரு காரணம் என்று பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சுயாஷ் சர்மாவை இடதுகை பேட்ஸ்மேனான நேஹல் வதேரா அட்டாக் செய்வார் என்பதை தெரிந்தும், மீண்டும் அவருக்கு ஓவரை கொடுத்தார்.
இதனால் பஞ்சாப் அணி 11வது ஓவரிலேயே ஆட்டத்தை முடித்துவிட்டது. அதேபோல் ஆர்சிபி அணியின் பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் கூட நிதானம் இல்லாமல் அனைத்து பந்துகளையும் அட்டாக் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் விளையாடியதும் தோல்விக்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. எந்த பேட்ஸ்மேனும் கடைசி வரை களத்தில் இருக்க வேண்டும் என்ற நினைக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தனர்.