பெங்களூர்: விராட் கோலி 6 ஓவர்கள் கொண்ட போட்டி என நினைத்து, முதல் பந்திலிருந்தே அடித்து ஆட முயற்சித்து விக்கெட்டை பறிகொடுத்தார் என முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் அவரை விமர்சித்திருக்கிறார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டி மழையின் காரணமாக 14 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களான விராட் கோலி மற்றும் ஃபில் சால்ட் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில், விராட் கோலியும் ஃபில் சால்ட்டும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக அதிக ரன்கள் சேர்த்திருந்தனர். விராட் கோலி 7 போட்டிகளில் 249 ரன்களைச் சேர்த்திருந்தார், அவரது சராசரி 49.8 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 141.47 ஆகவும் இருந்தது. அவர் மூன்று அரை சதங்களையும் அடித்திருந்தார். சில போட்டிகளில் ஃபில் சால்ட், விராட் கோலியை விட சிறப்பாக பேட்டிங் செய்திருந்தார்.
இந்நிலையில், இந்த 14 ஓவர் போட்டியில் இவர்கள் இருவரும் அதிரடியாக ஆடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது பெரும் ஏமாற்றத்தை அளித்தது. குறிப்பாக, விராட் கோலி 3 பந்துகளை சந்தித்து ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதன் காரணமாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரன் குவிக்க முடியாமல் திணறியது. அந்த அணி 14 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த எளிய இலக்கை பஞ்சாப் கிங்ஸ் அணி 12.1 ஓவர்களிலேயே எட்டி வெற்றி பெற்றது.
இது குறித்துப் பேசிய முன்னாள் வீரர் முகமது கைஃப், "விராட் கோலி பந்தை தூக்கி அடிக்க முயற்சித்தார். அவர் பொதுவாக 20 ஓவர் போட்டிகளில் இதுபோல வந்தவுடன் அடித்து ஆடி விளையாட மாட்டார். இது 14 ஓவர் போட்டி என்பதால், விராட் கோலி முதல் பந்திலிருந்தே அடித்து விளையாட வேண்டும் என நினைத்துவிட்டார்."
"ஆனால், இது போன்ற கடினமான பிட்சுகளில் முதலில் சிறிது நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். விராட் கோலி முதல் ஐந்து பந்துகள் வரை சற்றுப் பொறுமையாக இருந்து, அதன் பின்னர் அதிரடிக்கு மாறி இருக்கலாம். ஆனால், விராட் கோலி இது 6 ஓவர்கள் கொண்ட போட்டி என நினைத்துவிட்டார். அதனால், ஒரு மோசமான ஷாட்டை ஆடி ஆட்டமிழந்தார்" என்று விமர்சித்திருக்கிறார் முகமது கைஃப்.