பெங்களூர் : இந்திய டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக கேட்ச்களை பிடித்த வீரர் என்ற சாதனையை நட்சத்திர வீரர் விராட் கோலி படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 6வது லீக் போட்டியில் பெங்களூர் அணியை எதிர்த்து பஞ்சாப் அணி விளையாடி வருகிறது. இந்த சீசனில் பெங்களூர் அணி சொந்த மண்ணில் விளையாடும் முதல் போட்டி என்பதால், ஆர்சிபி ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி கேப்டன் டூ பிளஸிஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து பஞ்சாப் அணி தரப்பில் கேப்டன் ஷிகர் தவான் - பேர்ஸ்டோவ் கூட்டணி களமிறங்கியது.

ஆர்சிபி அணி தரப்பில் முகமது சிராஜ் முதல் ஓவரை வீசினார். முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து ஷிகர் தவான் அதிரடியாக தொடங்கினார். அந்த ஓவரில் 7 ரன்கள் சேர்க்கப்பட, மீண்டும் 3வது ஓவரை வீச சிராஜ் வந்தார். அந்த ஓவரின் முதல் 2 பந்துகளிலும் பேர்ஸ்டோவ் பவுண்டரி அடிக்க, 3வது பந்தை கொஞ்சம் கூடுதல் வேகத்துடன் ஷார்ட்டாக வீசினார் சிராஜ். அதனை அட்டாக் செய்த நினைத்து பேர்ஸ்டோவ் அடிக்க, அது நேராக கவர் திசையில் நின்றிருந்த விராட் கோலி கைகளுக்கு சென்றது.
இதனால் ஜானி பேர்ஸ்டோவ் வெறும் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் மூலமாக இந்திய டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக கேட்ச்களை பிடித்த சுரேஷ் ரெய்னாவின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். ஐபிஎல் மற்றும் சர்வதேச டி20 கிரிக்கெட் இரண்டையும் சேர்த்து விராட் கோலி இதுவரை 173 கேட்ச்களை பிடித்து டி20 கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இவரைத் தொடர்ந்து 2வது இடத்தில் நட்சத்திர முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா 172 கேட்ச்களுடன் உள்ளார்.
அதேபோல் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இதுவரை 167 கேட்ச்களை பிடித்து 3வது இடத்திலும், கேகேஆர் அணிக்காக விளையாடி வரும் மணீஷ் பாண்டே 146 கேட்ச்களுடன் 4வது இடத்திலும், இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் 136 கேட்ச்களுடன் 5வது இடத்திலும் உள்ளனர். இது விராட் கோலி ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. 2008ஆம் ஆண்டு முதல் டி20 கிரிக்கெட்டை விளையாடி வரும் விராட் கோலி இந்த சாதனையை படைத்திருப்பது பாராட்டுகளை பெற்று வருகிறது.