முல்லான்பூர்: 2025 ஐபிஎல் தொடரின் முதல் பிளே ஆஃப் தகுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் படுதோல்வி அடைந்தது பஞ்சாப் கிங்ஸ். பேட்டிங்கில் ஏற்பட்ட சொதப்பலால் அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இடையே வாக்குவாதம் எழுந்தது. ஓய்வறையில் நடந்த சம்பவம் நேரலையில் காட்டப்பட்டதால் பரபரப்பு எழுந்தது.
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி மிக மோசமான விக்கெட் வீழ்ச்சியை சந்தித்தது. ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த அணியும் செய்யாத வகையில், பிளே ஆஃப் போட்டியில் வெறும் 14.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 3 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அவர் அடித்த ஷாட் தேவையற்றதாக இருந்தது. அதுவும் தான் பலவீனமாக இருக்கும் ஜோஷ் ஹேசில்வுட்டின் பந்துவீச்சில் ஷாட் அடிக்க முயன்றார்.
இந்தப் போட்டிக்கு முன்னர் ஜோஷ் ஹேசில்வுட் பந்துவீச்சில் 20 பந்துகளில் ஐந்து முறை விக்கெட்டை இழந்திருக்கிறார் ஸ்ரேயாஸ் ஐயர். அப்படி இருக்கும்போது, ஜோஷ் ஹேசில்வுட் ஓவர்களில் அவர் சற்று கவனமாக விளையாடி இருக்கலாம். ஆனால், அவசரப்பட்டு பந்தை எட்ஜ் செய்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அவர் ஓய்வறைக்குத் திரும்பிய சில நிமிடங்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன. ஒரு கட்டத்தில் 60 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து இருந்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. அப்போது ஓய்வறையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கும், அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் வாக்குவாதம் போன்ற சூழ்நிலை இருந்தது. இருவரும் எழுந்து நின்று ஒருவரை ஒருவர் பார்த்து கோபமாகப் பேசிக்கொண்டனர்.
இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங்கில் எந்த திட்டமும் இன்றி ஆடியது போலத்தான் இருந்தது. இது தொடர்பாக பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இடையே கருத்து வேறுபாடு இருந்திருக்கலாம். இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. அடுத்து 102 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 10 ஓவர்களில் அதை எளிதாக எட்டி அபார வெற்றி பெற்றது.