சண்டிகர்: பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தேவையின்றி வம்புக்கு இழுத்து பிரச்சனை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் விராட் கோலி தேவையின்றி இந்திய அணி வீரர்களுடன் மோதலில் ஈடுபடுவதாக ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
2 ஆண்டுகளுக்கு முன்பாக லக்னோ மைதானத்தில் வைத்து விராட் கோலி மிகப்பெரிய சேட்டையை கொடுத்தார். லக்னோ அணியின் நவீன் உல் ஹக் மற்றும் ஆலோசகர் கம்பீர் ஆகியோருடன் நேரடி மோதலில் ஈடுபட்டார். சாதாரண வாக்குவாதம் கடுமையான மோதலாக மாறியது. அதற்கு பெங்களூர் மைதானத்தில் கம்பீர் செய்த சைலண்ட் சைகையே தொடக்கப் புள்ளியாக அமைந்தது.

அதேபோல் இந்த சீசனில் சின்னச்சாமி மைதானத்தில் ஆர்சிபி அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வீழ்த்தியது. அப்போது ஆர்சிபி அணி ரசிகர்கள், ஆர்சிபி.. ஆர்சிபி.. என்று கோஷம் எழுப்பிய போது, பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சத்தம் கேட்களை என்று சைகை கொடுக்க, மொத்த ஆர்சிபி ரசிகர்களும் அமைதியாகினர்.
இந்த வீடியோ வெளியாகி ட்ரெண்டாகியது. இந்த நிலையில் இன்று முல்லன்பூர் மைதானத்தில் நடந்த போட்டியில் பஞ்சாப் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி அபார வெற்றியை பெற்றது. சிறப்பாக ஆடிய விராட் கோலி, கடைசி வரை களத்தில் இருந்து 54 பந்துகளில் ஒரு சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட 73 ரன்களை விளாசினார்.
ஆர்சிபி அணி வெற்றிபெற்ற பின் உடனடியாக நடு கிரீஸ்-க்கு வந்த விராட் கோலி, பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை நக்கல் செய்யும் வகையில் டான்ஸ் ஆடி சேட்டை செய்தார். இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் நேரடியாகவே தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதன்பின் வீரர்கள் அனைவருடனும் விராட் கோலி கைகுலுக்கினார்.
ஸ்ரேயாஸ் ஐயருடன் கைகுலுக்க சென்ற போது, சிரித்து கொண்டே விளக்கம் கொடுத்தார். ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் அதனை ஏற்கவில்லை. நேரடியாகவே விராட் கோலியுடன் வார்த்தை மோதலில் ஈடுபட்டு விலகி சென்றார். அதுமட்டுமல்லாமல் ஃபீல்டிங்கின் போதும் பிரப்சிம்ரன் சிங் விக்கெட்டாகி வெளியேறிய போது, அதீத ஆக்ரோஷத்துடன் இருந்தார். இதனால் விராட் கோலியை ரசிகர்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.