பெங்களூர்: ஐபிஎல் மெகா ஏலத்தில் புவனேஷ்வர் குமார், ஹேசல்வுட் ஆகியோரை விடவும், ஆர்சிபி அணி க்ருனால் பாண்டியாவை வாங்கியது மிகச்சிறந்த முடிவு என்று அந்த அணியின் பயிற்சியாளர் ஆண்டி பிளவர் பாராட்டு தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் க்ருனால் பாண்டியாவின் பவுலிங் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்ததாக கூறிய அவர், வெற்றிக்கான பசியுடன் அவர் இருப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. கடைசி 2 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 18 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், ஹேசல்வுட் வீசிய 19வது ஓவரில் ஆட்டம் மொத்தமாக மாறியது. இதன் மூலமாக சின்னச்சாமி மைதானத்தில் ஆர்சிபி அணி தங்களின் முதல் வெற்றியை பெற்றுள்ளது.

இதன் மூலமாக புள்ளிப் பட்டியலில் 12 புள்ளிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. எஞ்சியுள்ள 5 போட்டிகளில் 2 போட்டிகளில் வென்றாலே, ஆர்சிபி அணியால் எளிதாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். இதனால் ஆர்சிபி அணியின் ரசிகர்கள் உற்சாகமடைந்து உள்ளனர். அதேபோல் வெற்றிக்கு காரணமான ஹேசல்வுட்டையும் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆர்சிபி அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்டி பிளவர், இந்த வெற்றிக்கு க்ருனால் பாண்டியா முக்கிய பங்காற்றி இருப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆண்டி பிளவர் பேசுகையில், ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆர்சிபி அணி வாங்கிய வீரர்களில் முக்கியமானவர் க்ருனால் பாண்டியா தான். அவரை ரூ.5.75 கோடிக்கு வாங்கி இருந்தோம்.
அவரிடம் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் திறமையோடு, அனுபவமும் இருக்கிறது. சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார். ஐபிஎல் தொடரில் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். இந்திய அணிக்காகவும் சில காலம் பங்காற்றி உள்ளார். அதனைவிடவும், வெற்றிக்கான பசியுடன் இருக்கிறார். க்ருனால் பாண்டியாவிடம் பிடித்தது அதுதான்.
ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா இருவரிடமும் அந்த பசி இருக்கிறது. அதனால் ஆர்சிபி அணியின் சிறந்த தேர்வு க்ருனால் பாண்டியா தான். இன்றைய ஆட்டத்தில் ரியான் பராக் மற்றும் நிதீஷ் ராணா இருவரின் விக்கெட்டையும் வீழ்த்தி மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தார். ஆர்சிபி அணியின் ஸ்பின் பயிற்சியாளருடன் அவர் இணைந்து பணியாற்றி வருகிறார்.
அவர்களுக்குள் சிறந்த ஆலோசனைகள் மற்றும் திட்டங்கள் இருக்கிறது. அதனை க்ருனால் பாண்டியா களத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அவர் ஆர்சிபி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்து வருவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் அணியின் பராக் மற்றும் நிதீஷ் ராணா இருவரும் அதிரடியில் வெளுத்த போது, அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டை வீழ்த்தி ஆர்சிபி அணியை க்ருனால் பாண்டியா ஆட்டத்திற்கு கொண்டு வந்தார்.