கடைசி 5 ஓவர்களில் 49 ரன்கள்.. 3 ஓவர்களில் கோட்டைவிட்ட ஆர்சிபி.. 206 ரன்களை சேஸ் செய்யுமா ராஜஸ்தான்?
பெங்களூர்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்களை குவித்துள்ளது. இந்த இன்னிங்ஸில் ஆர்சிபி அணி வெறும் 6 சிக்சர்களை மட்டுமே விளாசிய நிலையில், கடைசி 4 ஓவர்களில் வெறும் 45 ரன்களை மட்டுமே சேர்த்தது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரின் 42வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து ஆர்சிபி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதன்பின் ஆர்சிபி அணி தரப்பில் விராட் கோலி - பில் சால்ட் கூட்டணி தொடக்கம் கொடுக்க, ராஜஸ்தான் அணிக்காக ஆர்ச்சர் முதல் ஓவரை வீசினார்.

பவர் பிளே ஆட்டம்
முதல் ஓவரிலேயே 11 ரன்கள் சேர்க்கப்பட, தொடர்ந்து விராட் கோலி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி வந்தார். அதிலும் துஷார் தேஷ்பாண்டே வீசிய 5வது ஓவரிலேயே 3 பவுண்டரிகள் அடிக்கப்பட, ஆர்சிபி அணி பவர் பிளே ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 59 ரன்களை விளாசியது. இதனால் ஆர்சிபி அணியின் கைகள் ஓங்க, அடுத்த ஓவரிலேயே பில் சால்ட் 26 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
விராட் கோலி - படிக்கல் பார்ட்னர்ஷிப்
இதன்பின் விராட் கோலி - படிக்கல் கூட்டணி இணைந்து உருட்டு உருட்டு என்று உருட்டினார்கள். கொஞ்சம் கூட ரிஸ்க் எடுக்காமல் பவுண்டரியை மட்டுமே விளாசி வந்தனர். இதனால் 10 ஓவர்களில் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 83 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனிடையே ராஜஸ்தான் அணி ஃபீல்டர்களுக்கு வந்த ஏராளமான கேட்ச்களை கோட்டைவிட்டனர்.
விராட் கோலி அரைசதம்
இதன்பின் 12வது ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசிய விராட் கோலி, 32 பந்துகளில் தனது அரைசதத்தை விளாசினார். இதன்பின் ரியான் பராக் வீசிய 14வது ஓவரில் படிக்கல் மற்றும் விராட் கோலி சிக்ஸ் அடிக்க, ஆர்சிபி அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இதன்பின் துஷார் தேஷ்பாண்டே வீசிய 15வது ஓவரில் 3 சிக்ஸ் உட்பட 22 ரன்கள் விளாசப்பட்டது. இதனால் ஆர்சிபி ரசிகர்களின் கோஷம் உச்சத்தில் இருந்தது.
2 ஓவர்களில் மாறிய ஆட்டம்
அப்போது ஆர்ச்சர் வீசிய அடுத்த ஓவரில் விராட் கோலி 70 ரன்களில் ஆட்டமிழக்க, சந்தீப் சர்மா வீசிய 17வது ஓவரில் படிக்கல் 50 ரன்களிலும், ரஜத் பட்டிதார் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதன் காரணமாக ஃபினிஷிங் செய்யும் பொறுப்பு டிம் டேவிட் - ஜித்தேஷ் சர்மா கூட்டணி வசம் ஒப்படைக்கப்பட்டது. அதற்கேற்ப 18வது ஓவரில் 14 ரன்கள் விளாசப்பட்டது.
மாஸ் ஃபினிஷிங்
தொடர்ந்து சந்தீப் சர்மா வீசிய 19வது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 16 ரன்கள் சேர்க்கப்பட்டது. இந்த நிலையில் கடைசி ஓவரை வீச ஆர்ச்சர் கொண்டு வரப்பட்டார். அந்த ஓவரில் 8 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட, ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்து அசத்தியது. கடைசி 4 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 45 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து கம்பேக் கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications