IPL 2026: யாரு சாமி இவன்! 2வது முறையாக 15 பந்துகளில் அரைசதம்.. ஆர்சிபியை கதறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி
கவுஹாத்தி: 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐபிஎல் 2026 போட்டியில் அதிரடி காட்டி வருகிறார். கவுஹாத்தியின் பர்சாபரா கிரிக்கெட் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில், அவர் வெறும் 15 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். இம்பாக்ட் வீரராக களமிறங்கிய வைபவ், 202 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்தி, ஐந்தாவது ஓவரின் மூன்றாவது பந்தில் புவனேஷ்வர் குமாரை சிக்ஸருக்கு பறக்கவிட்டு தனது 50 ரன்களை எட்டினார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முதல் போட்டியிலேயே, மார்ச் 30 அன்று கவுஹாத்தியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராகவும் அவர் 15 பந்துகளில் 50 ரன்களை எடுத்திருந்தார். இதன் மூலம், நடப்பு ஐபிஎல் தொடரில் 15 பந்துகளில் வைபவ் இரண்டாவது முறையாக அரை சதம் விளாசியுள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் 15 அல்லது அதற்கும் குறைவான பந்துகளில் இரண்டு அரைசதங்கள் அடித்த இரண்டாவது பேட்ஸ்மேன் என்ற அரிய பெருமையை சூர்யவன்ஷி இதன்மூலம் பெற்றுள்ளார். இவருக்கு முன்னதாக, 2024 ஐபிஎல் சீசனில் ஆஸ்திரேலிய வீரர் ஜேக் ஃப்ரெஸர்-மெகர்க், டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக இதே சாதனையை நிகழ்த்தியிருந்தார்.
ஐபிஎல் தொடரில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனை ராஜஸ்தான் ராயல்ஸின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் வசமுள்ளது. 2023 ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மே 11, 2023 அன்று KKR அணிக்கு எதிராக 13 பந்துகளிலேயே 50 ரன்களை எட்டி, ஜெய்ஸ்வால் இந்த சிறப்பான சாதனையைப் படைத்தார்.
வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடியால் , ராஜஸ்தான் அணி பவர்பிளே முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து அதிரடி காட்டிய வைபவ், சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 26 பந்துகளில் 78 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதில் 7 சிக்சர், 8 பவுண்டரிகள் அடங்கும். குர்னல் பாண்டியா பந்துவீச்சில் சிக்சர் அடிக்க முயன்ற பைவவ், விராட் கோலியிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.


Click it and Unblock the Notifications