பெங்களூர்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி 32வது பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் விராட் கோலி அடிக்கும் 60வது அரைசதம் இதுவாகும். அதேபோல் இந்த சீசனில் 9 இன்னிங்ஸில் ஆடியுள்ள விராட் கோலி, தனது 5 அரைசதத்தை விளாசி இருக்கிறார்.
ஐபிஎல் தொடரின் 42வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் பில் சால்ட் - விராட் கோலி கூட்டணி தொடக்கம் கொடுத்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் ஆர்ச்சர் முதல் ஓவரை வீசினார்.

அந்த ஓவரில் விராட் கோலி கொடுத்த கேட்சை தவறவிட, அதன்பின் ஆர்சிபி அணியின் இரு வீரர்களும் பவுண்டரியாக விளாசி தள்ளினர். ஓவருக்கு 2 பவுண்டரியை விளாசி தள்ளியதால், பவர் பிளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 59 ரன்களை குவித்தது. இதன்பின் ஹசரங்கா வீசிய 7வது ஓவரில் சால்ட் 26 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதன்பின் விராட் கோலி - படிக்கல் கூட்டணி இணைந்து, பவுண்டரிகளாக விளாசி தள்ளியது. இதனிடையே இரு பேட்ஸ்மேன்களும் கொடுத்த கேட்ச்களை ராஜஸ்தான் அணி வீரர்கள் எளிதாக கோட்டைவிட்டனர். இதனை பயன்படுத்தி கொண்ட விராட் கோலி, அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி ஸ்கோரை உயர்த்தினார்.
தொடர்ந்து அதிரடியாக ஆடிய விராட் கோலி 32 பந்துகளில் தனது 60வது அரைசதத்தை நிறைவு செய்தார். கடைசி 6 இன்னிங்ஸில் விராட் கோலி அடிக்கும் 4வது அரைசதம் இதுவாகும். அதேபோல் இந்த சீசனில் 9 இன்னிங்ஸில் ஆடியுள்ள விராட் கோலி, 5 அரைசதங்களை விளாசி இருக்கிறார். அதேபோல் ஐபிஎல் வரலாற்றில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான அதிக ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
அதேபோல் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி 2வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். 9 இன்னிங்ஸில் ஆடியுள்ள அவர், சுமார் 400 ரன்களை எட்டியிருக்கிறார். இதனால் ஆரஞ்ச் கேப் ரேஸில் விராட் கோலி வந்துள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.