பெங்களூர்: ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் கடைசி 2 ஓவர்களில் ராஜஸ்தான் அணி தோல்வியடைந்தது குறித்து அந்த அணியின் கேப்டன் ரியான் பராக் விளக்கம் அளித்துள்ளார். தோல்விக்கு எங்களை நாங்கே குறை சொல்ல வேண்டும் என்று கூறிய அவர், ஸ்பின்னர்களை அட்டாக் செய்யாமல் விட்டதன் விளைவை அனுபவித்து வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்களை சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

தொடர்ச்சியாக 4வது முறையாக ராஜஸ்தான் அணி கையில் இருந்த ஆட்டத்தை ஆர்சிபி அணியிடம் பறிகொடுத்துள்ளது. இந்த தோல்வியின் காரணமாக ராஜஸ்தான் அணியின் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. இதனால் ராஜஸ்தான் அணியின் ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர்.
இந்த தோல்விக்கு பின் ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் பேசுகையில், நாங்கள் நன்றாகவே பேட்டிங் செய்ததாக நினைக்கிறேன். இந்த பிட்சில் 220 ரன்கள் வரை சேர்க்க முடியும் என்று கருதினேன். நாங்கள் பவுலிங்கில் சிறப்பாக கம்பேக் கொடுத்தோம். பேட்டிங்கின் போது முதல் பாதி முடிவடைந்த போது, ஆட்டம் எங்களின் கையில் இருந்ததாக நினைத்தேன்.
ஆனால் இந்த தோல்விக்கு எங்களை மட்டுமே குறை சொல்ல முடியும். ஸ்பின்னர்களுக்கு எதிரான நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை. வீரர்கள் சுதந்திரத்தில் விளையாடி திறமையை வெளிப்படுத்த வேண்டிய கடமை உள்ளது. ஐபிஎல் தொடரில் ஒரு தவறு செய்தால் கூட, அதற்கான சிக்கலை எதிர்கொள்ள வேண்டும். அந்த தவறுக்கான பலனை அனுபவித்துள்ளோம்.
எப்போது எங்கள் அணியின் ஆலோசனை குழுவாக அமைந்துள்ளது. இதுபோன்ற சூழல்களை பேசி, அதற்கான பயிற்சிகளை செய்கிறோம். எப்படி செயல்பட வேண்டும் என்பதை அறிந்து கொள்கிறோம். ஆனால் அதனை இன்று செயல்படுத்த முடியவில்லை. கையில் இருந்த ஆட்டத்தை விட்டுக் கொடுத்துள்ளோம். இனி வரும் போட்டிகளில் எங்களின் பெயருக்காக விளையாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.