ஆர்சிபி-க்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய இஷான் கிஷன்.. ஐதராபாத் அணியின் இளம் கேப்டனாக புதிய சாதனை
பெங்களூர்: 2026 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தற்காலிக கேப்டனாகக் களமிறங்கிய இஷான் கிஷன் பல அதிரடி சாதனைகளைப் படைத்து மிரட்டினார். பேட்டிங் மற்றும் கேப்டன்சி என இரண்டிலும் அசத்திய அவர், ஐதராபாத் அணியின் வரலாற்றுப் புத்தகத்தில் தனது பெயரைப் பதித்துள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதுகு வலி காயம் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் ஆரம்பக் கட்டப் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
இதனால் இஷான் கிஷனுக்கு தற்காலிகமாக கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வழிநடத்தும் மிக இளம் வயது இந்திய கேப்டன் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன் ஷிகர் தவான் வசம் இருந்த சாதனையை இஷான் தகர்த்துள்ளார்.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ஐதராபாத் அணியை வழிநடத்திய மிக இளம் வயது கேப்டன்களின் பட்டியலில் கேன் வில்லியம்சனுக்கு அடுத்தபடியாக இஷான் கிஷன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். 2018-ல் 27 வயது 244 நாட்களில் வில்லியம்சன் கேப்டனாகப் பொறுப்பேற்றார். தற்போது இஷான் கிஷன் 27 வயது 253 நாட்களில் இந்தச் சாதனையைச் செய்துள்ளார். 2025 மெகா ஏலத்தில் 11.25 கோடி ரூபாய்க்கு ஐதராபாத் அணியால் வாங்கப்பட்ட இஷான் கிஷன், நிர்வாகத்தின் நம்பிக்கையை வீணடிக்காமல் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்.
கேப்டனாகத் தனது முதல் போட்டியிலேயே இஷான் கிஷன் பேட்டிங்கிலும் மிரட்டினார். ஆர்சிபி பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்த அவர், வெறும் 38 பந்துகளில் 80 ரன்களைக் குவித்து புதிய வரலாறு படைத்தார். ஐதராபாத் அணியின் கேப்டனாக அறிமுகமான போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற மனிஷ் பாண்டேவின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். 2021-ல் மனிஷ் பாண்டே தனது முதல் கேப்டன்சி போட்டியில் 69 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. இந்தப் பட்டியலில் டேவிட் வார்னர் (53 ரன்கள்) மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இந்தப் போட்டியில் டிரேவிஸ் ஹெட் (11), அபிஷேக் சர்மா (7) மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி (1) போன்ற முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினர். ஆனால், இஷான் கிஷன் பொறுப்புடன் விளையாடி 27 பந்துகளிலேயே அரைசதம் கடந்தார். இந்தப் போட்டியின் மூலம் ஐபிஎல் தொடரில் 3000 ரன்கள் என்ற மைல்கல்லையும் அவர் எட்டினார். ஆர்சிபி அணியின் அறிமுக வீரர் ஜேக்கப் டஃபி வீசிய பந்தில் பில் சால்ட் பிடித்த அற்புதமான கேட்ச் மூலம் இஷான் கிஷன் ஆட்டமிழந்தார்.
இஷான் கிஷனின் இந்த அதிரடி ஆட்டம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது. எனினும், அடுத்து ஆடிய ஆர்சிபி அணி 94 பந்துகளிலேயே வெற்றி இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications