பெங்களூர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த வெற்றியை ஆர்சிபி ரசிகர்கள், உற்சாகமாக கொண்டாடினர். சில இடங்களில் கொண்டாட்டம் எல்லையை கடந்தது.
நகர் முழுவதும் பட்டாசுகள் வெடிக்கப்பட்ட காட்சிகள் வெளியாகின, பெங்களூரு தெருக்கள் அதிகாலை வரை வெற்றியைக் கொண்டாடும் ரசிகர்களால் நிரம்பி வழிந்தன. கர்நாடகாவில் உள்ள காவல்துறையினர் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

இதனால் ஒரே நாளில் 150 கோடி ரூபாய் மேல் கர்நாடக அரசுக்கு கிடைத்துள்ளது. இது முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாகும். அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 24 மணி நேரத்தில் கர்நாடகாவில் 1.48 லட்சம் பீர் கிரேட்டுகள் விற்பனையாகின.
மேலும் நள்ளிரவுக்கு பிறகும் மதுபான கடைகளுக்கு வெளியே நீண்ட வரிசைகள் காணப்பட்டன.
பீர் மட்டுமல்லாமல், 1.28 லட்சம் பிற வகை மதுபான கிரேட்டுகளும் ரசிகர்களால் கொண்டாட்டத்தில் வாங்கப்பட்டன. இதனால் அன்றைய மொத்த மதுபான விற்பனை 157.94 கோடி ரூபாய் என புதிய உச்சத்தை அடைந்திருக்கிறது.
இது கடந்த ஆண்டு இதே நாளை விட 132 கோடி ரூபாய் அதிகமாகும். இது தொடர்பாக கர்நாடக அரசு மாநில கலால் துறை அதிகாரி பேசுகையில், "இது RCB-யின் வெற்றி மட்டுமல்ல, இது கர்நாடகாவின் தீபாவளி. இதுபோன்ற ஒரு நிகழ்வை நாங்கள் பார்த்ததில்லை."
"முழு விநியோகச் சங்கிலியும் அழுத்தத்திற்கு உள்ளானது, ஆனால் கடைகள் இரவு வரை திறந்திருந்தன," என்று கூறினார். இந்த செய்தியை குறிப்பிட்டுள்ள சமூக ஆர்வலர்கள், பெங்களூரில் நேற்று நடந்த பல சம்பவங்களுக்கு இந்த மதுபானமும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.