இங்கிலாந்தில் சட்டையை கழற்றி சுற்றியது ஏன்?.. கங்குலியே சொல்கிறார் கேளுங்கள்
Recommended Video

சட்டையை கழற்றி சுற்றியது ஏன்?...கங்குலியே சொல்கிறார்- வீடியோ
டெல்லி : இங்கிலாந்துக்கு எதிரான 2002 நாட்வெஸ்ட் தொடரை இந்திய அணி வென்ற போது, அப்போதைய கேப்டன் கங்குலி தன் சட்டையை கழற்றி, சுழற்றிய சம்பவம் மிகவும் பிரபலமான ஒன்று. இன்று வரை கங்குலி பற்றி பேசினால், இந்த சம்பவத்தை நினைவு கூறாமல் இருக்க முடியாது. அதிக செய்தி ஊடகங்கள், சமூக வலைதளங்கள் இல்லாத காலத்திலேயே வைரலான சம்பவம் இது.
ஆன்ட்ரூ பிளின்டாப் இந்தியாவில் நடந்த ஒரு நாள் தொடரின் போது, தன் சட்டையை கழற்றி, வெற்றியை கொண்டாடினார். அதற்கு பழி தீர்க்கும் வகையில் தான் கங்குலி இதை செய்தார் என பரவலாக பேசப்பட்டது. இதை பற்றி அதிகம் வெளியில் பேசாத கங்குலி, தற்போது “ப்ரேக்பாஸ்ட் வித் சாம்பியன்ஸ்” என்ற இணைய நிகழ்ச்சியில் இது பற்றி பேசி இருக்கிறார்.

அவர், “ நான் வலது பக்கம் நின்று இருந்தேன். விவிஎஸ் லக்ஷ்மன் என் இடப்பக்கமும், ஹர்பஜன் என் பின்புறமும் இருந்தார்கள். நான் சட்டையை கழற்றிக் கொண்டு இருந்த போது, லக்ஷ்மன் “இதை செய்ய வேண்டாம், செய்ய வேண்டாம்” என சொல்ல முயன்றார். சட்டையை கழற்றிய பிறகு ஹர்பஜன் “இப்போது நான் என்ன செய்வது?” என கேட்டார். அதற்கு, “நீயும் சட்டையை கழற்று” என கூறினேன்” என்றார்.
எதற்காக இந்த காரியத்தை செய்தார் என்பதையும் கூறினார். “அந்த நேரத்தில் தான் இந்த யோசனை எனக்கு வந்தது. வான்கடே மைதானத்தில் இங்கிலாந்து தொடரை 3-3 என சமன் செய்த போது ஆன்ட்ரூ பிளின்டாப் தன் சட்டையை கழற்றி கொண்டாடினார். அதே போல நானும் லார்ட்ஸ் மைதானத்தில் ஏன் செய்யக்கூடாது என எண்ணினேன்” என இது பற்றி விளக்கினார் கங்குலி.
மேலும் இது பற்றி பேசிய கங்குலி, “இந்த சம்பவம் எனக்கு சங்கடமாகக் கூட இருக்கிறது. ஒருமுறை என் மகள் “அதை ஏன் செய்தீர்கள்? கிரிக்கெட்டில் இது போல செய்ய வேண்டுமா?” என கேட்டார். “இல்லை, ஒரு முறை நான் தவறுதலாக இப்படி செய்து விட்டேன்” என கூறினேன். சில சமயம், வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் நம் கட்டுப்பாடு இல்லாமலேயே நடந்து விடுகிறது” என்றார்.
இந்த பேட்டியில், தோனி பற்றி கூறிய கங்குலி, ஏழாவது இடத்தில் பேட்டிங் செய்து வந்த தோனியை, ஒரு போட்டியில் தான் களமிறங்கி வந்த மூன்றாம் இடத்தில் களமிறக்கிய போது, அவர் 170 ரன்கள் குவித்ததை நினைவு கூர்ந்தார். விராத் கோலியின் தலைமையில் இந்தியா சாதிக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
Story first published: Saturday, July 28, 2018, 12:57 [IST]
Other articles published on Jul 28, 2018


Click it and Unblock the Notifications