மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் யாருமே எதிர்பார்க்காத வகையில் இங்கிலாந்து அணி விளையாடிய 6 போட்டிகளில் ஐந்தில் தோல்வி ஒன்றில் வெற்றி என இரண்டு புள்ளிகள் உடன் கடைசி இடத்தில் இருக்கிறது.
நடப்பு சாம்பியனாக களம் இறங்கிய இங்கிலாந்து அணிக்கு இந்த நிலைமை ஏற்படும் என்று யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல் விளையாடும் இங்கிலாந்து அணி வீரர்கள் எவ்வாறு ஒருநாள் கிரிக்கெட்டில் இப்படி தடுமாறுகிறார்கள் என்ற சந்தேகம் அனைவருக்குமே ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் இந்த சரிவுக்கு என்ன காரணம் என்பதை தற்போது பார்க்கலாம். 2015 ஆம் ஆண்டு உலக கோப்பையில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்த பிறகு அந்த அணி தங்களுடைய வெள்ளை நிற கிரிக்கெட்டின் யுத்தியை முற்றிலுமாக மாற்றியது. மரபு கிரிக்கெட் ஆன டெஸ்ட் போட்டியை உயிராக கடைப்பிடித்து வந்த இங்கிலாந்து அணி அதிலிருந்து மாறி அதிரடியாக விளையாட வேண்டும் என முடிவு எடுத்தது.
அதற்கு முதல் படியாக இங்கிலாந்து ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு சாதகமாக மாற்றப்பட்டது. அதற்கு ஏற்ற வகையில் இங்கிலாந்து அணி வீரர்கள் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் மட்டுமல்லாமல் டெஸ்டிலும் அதிரடியாக விளையாட தொடங்கி விட்டார்கள். இதனால் ஆடுகளம் கொஞ்சம் சவாலாக மாறினால் கூட இங்கிலாந்து வீரர்களால் அதிரடியாக விளையாட முடியாத சூழல் ஏற்பட்டு தடுமாற தொடங்கினார்கள்.
இந்தியாவில் ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என்று தப்பு கணக்கு போட்டு வந்து சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் விளையாடும் போது இங்கிலாந்து அணி வீரர்கள் தடுமாற தொடங்கி விட்டார்கள். அதிரடியாக விளையாடுகிறேன் என்ற பெயரில் சவாலான ஆடுகளத்தில் எப்படி விளையாட வேண்டும் என்பதை மறந்ததாலேயே இங்கிலாந்து அணிக்கு இந்த சரிவு ஏற்பட்டு இருக்கிறது.
பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் சொல்வது போல் ஆடுகளத்திற்கு மரியாதை கொடுத்து விளையாடுங்கள் என்ற கிரிக்கெட்டின் அடித்தளத்தையே இங்கிலாந்து மறந்துவிட்டது. சொந்த நாட்டில் ஆடுகளத்தை பேட்டிங்கிற்கு சாதகமாக மாற்றி தங்களுக்கு தாங்களே சூனியம் வைத்து கொண்டார்கள்.