ட்ரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்விக்கு சஞ்சு சாம்சனின் ரன் அவுட்டே காரணமாக பார்க்கப்படுகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டெஸ்ட், ஒருநாள் தொடர்களுக்கு பின் இந்திய அணி டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து எளிய இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது.

இருப்பினும் 11 ஓவர்களில் 77 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. பின்னர் ஹர்திக் பாண்டியா - சஞ்சு சாம்சன் இணை நிதானமாக ஆடியது. இதனால் கடைசி 5 ஓவர்களில் இந்திய அணி வெற்றிபெற 37 ரன்கள் மட்டும் எடுத்தால் போதும் என்ற நிலை உருவாகியது. இதனால் இந்திய அணிக்கு வெற்றி உறுதி என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர்.
ஆனால் 16வது ஓவரை வீசிய ஜேசன் ஹோல்டர், முதல் பந்திலேயே ஹர்திக் பாண்டியாவை வீழ்த்தினார். அதன்பின் அக்சர் படேல் களமிறங்கினார். அவர் 3வது பந்தில் சிங்கிள் எடுக்க முயற்சித்த சஞ்சு சாம்சன் வேகமாக ரன் எடுக்க ஓடுகையில், மேயர்ஸ் வீசிய த்ரோ சரியாக ஸ்டம்பை பதம் பார்த்தது. இதனால் சஞ்சு சாம்சன் 12 ரன்களுடன் வெளியேறினார்.
எந்த அவசரமும் இல்லாமல் நிதானமாக ஆடிய சஞ்சு சாம்சன் ரன் அவுட்டானதால், வெஸ்ட் இண்டீஸ் அணியின் உடல்மொழி மொத்தமாக மாறியது. அந்த ஓவரை ஜேசன் ஹோல்டரும் மெய்டன் ஓவராக மாற்றினார். அந்த ஓவர் தொடங்கும் போது 30 பந்துகளில் 37 ரன்கள் என்ற இருந்தது. ஆனால் அந்த ஓவருக்கு பின் 24 பந்துகளில் 37 ரன்கள் என்ற நிலை உருவாகியது.
இதையடுத்து டெய்லண்டர்களை வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் எளிதாக சமாளித்துவிட்டனர். இறுதியாக இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஹர்திக் பாண்டியாவின் விக்கெட்டை விடவும் சஞ்சு சாம்சனின் ரன் அவுட்டே இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது.