
ஓய்வு
இந்த நிலையில், இளம் வீரர்கள் மற்றும் சுமாரான வீரர்களை கொண்ட ஆஸ்திரேலிய அணியை, வங்கதேசத்துக்கு அனுப்பியது ஆஸி., கிரிக்கெட் வாரியம். வங்கதேச அணி என்பதால் அவர்கள் சுமாரான அணியை அனுப்பவில்லை. விரைவில் ஆஷஸ் தொடர் தொடங்க இருப்பதால், அதற்காக மெயின் வீரர்களை பாதுகாத்து வருகிறது ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம். வார்னர், ஸ்மித், பேட் கம்மின்ஸ் என்று பல முக்கிய வீரர்களும் ஓய்வில் இருக்கின்றனர்.

ஆஸ்திரேலியா தோல்வி
இதனால், ஓரளவுக்கு சுமாரான அணியை வங்கதேசம் அனுப்பியது ஆஸ்திரேலியா. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. நம்புவீர்களா? முதல் இரு மேட்சிலும் வங்கதேசமே வெற்றிப் பெற்றிருக்கிறது. நம்புங்க,, அதான் நெசம்! முதல் டி20 போட்டியில் வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால், அதைக் கூட ஆஸ்திரேலியாவில் அடிக்க முடியவில்லை.

பரிதாப ஆஸ்திரேலியா
20 ஓவர்கள் முழுமையாக விளையாடி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 108 ரன்கள் மட்டும் எடுத்து தோற்றது ஆஸ்திரேலியா. அடுத்து 2வது டி20 போட்டியில், ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. அடித்த ரன்கள் எவ்வளவு தெரியுமா? 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் மட்டுமே. இவ்வளவு குறைவான ஸ்கோரை அடித்துவிட்டு எங்கிருந்து டிஃபண்ட் செய்வது? வங்கதேசம் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 123 ரன்கள் எடுத்து வென்றது.

சிக்கல் என்ன?
ஆஸ்திரேலிய அணி நிர்வாகம், ஆஷஸ் தொடருக்காக டாப் வீரர்களை பதுக்கி வைத்திருப்பதெல்லாம் ஓகே.. ஆனால், அவர்கள் வங்கதேசம் அனுப்பிய சில வீரர்களின் தரம் என்ன? மாய்சஸ் ஹென்றிக்ஸ், மேத்யூ வேட் டேனியல் கிறிஸ்டியன் ஆகியோரை தேர்வு செய்ததற்கான காரணம் என்ன? இவர்கள் மூவரும் போதி தர்மர் காலத்திலேயே போனியாகாதவர்கள். இன்னமுமா ஹென்றிக்ஸ், கிறிஸ்டியன் ஆகியோர்களுக்கு மாற்றாக ஆல் ரவுண்டர்களை கண்டறியவில்லை? இன்னமுமா மேத்யூ வேட்-க்கு மாற்று விக்கெட் கீப்பரை கண்டறியவில்லை? மேத்யூ வேட்... என்னவென்று சொல்ல... கடந்த 10 வருடங்களாக இவர் அணிக்கு செய்திருக்கும் பங்களிப்பு என்ன? எந்தத் தொடரிலாவது இவர்கள் மூவரும் ஜொலித்து இருக்கிறார்களா? ஆஸி., உள்ளூர் தொடர்களில் இவர்கள் ஓரளவு நன்றாக விளையாடினார்கள் என்பது ஓகே தான். ஆனால், அணியில் மீண்டும் இடம் பிடிக்க அந்த தகுதி மட்டும் போதுமா?

ரொம்ப கஷ்டம்
நம்முடைய சந்தேகம் அவர்களை ஏன் ஆஸ்திரேலிய நிர்வாகம் தேர்ந்தெடுத்தது? என்பது பற்றியல்ல. அவர்களுக்கு மாற்று வீரர்களை கண்டறிய ஆஸி., நிர்வாகம் தவறியது ஏன்? என்பது தான் நமது கேள்வி. இப்படியொரு மோசமான டீமை வைத்துக் கொண்டு ஜிம்பாப்வேயில் கூட ஆஸ்திரேலியாவால் வெற்றிப் பெற முடியாது. இன்னும் ஓப்பனாக சொல்ல வேண்டுமெனில், இப்போதுள்ள ஆப்கானிஸ்தான் அணி, அயர்லாந்து அணிகளை அவர்கள் மண்ணில் வைத்து இந்த ஆஸ்திரேலிய அணியால் நிச்சயம் வீழ்த்த முடியாது என்று உறுதியாக கூறலாம்.

சரிவுக்கு காரணம்
அப்படியிருக்கையில், வங்கதேசத்தை அவர்கள் மண்ணில் வைத்து எப்படி வீழ்த்துவது? கடந்த 6 - 7 வருடங்களாக உள்ளூரில் கிங்காக வலம் வருகின்றது வங்கதேசம். இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை என்று அனைத்து அணிகளும் அங்கு சென்று அடி வாங்கி வந்திருக்கின்றன. இந்த Stats ஆஸி., நிர்வாகத்துக்கு எப்படி தெரியாமல் இருக்கும்? அப்படியிருக்க, இந்த அணியால் எப்படி வங்கதேசத்தை ஜெயிக்க முடியும்? வெற்றி, தோல்வியை விடுங்க. நாம் மேலே குறிப்பிட்ட அந்த 3 வீரர்களுக்கு மாற்று கண்டுபிடிக்க முடியாமல் போனதே ஆஸ்திரேலிய அணியின் இந்த சரிவுக்கு காரணம்.


Click it and Unblock the Notifications