சுரேஷ் ரெய்னா அத்தை உயிருக்கு போராட்டம்.. மர்ம கும்பல் கொடூர தாக்குதல்.. மாமா பலி.. அதிர்ச்சி தகவல்
டெல்லி : சுரேஷ் ரெய்னா 2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய நிலையில், அதற்கான காரணம் குறித்து பலரும், பல்வேறு விதமாக கூறி வந்தனர்.
Recommended Video
தற்போது உண்மையான காரணம் தெரிய வந்துள்ளது. பதான்கோட்டில் இருக்கும் அவரது அத்தை வீட்டில் மர்ம கும்பல் ஒன்று மோசமாக தாக்குதல் நடத்தி உள்ளது.
அதில் அவரது மாமா இறந்து விட்டார். அவரது அத்தை உயிருக்கு போராடி வருகிறார்.

பயிற்சி முகாம்
2020 ஐபிஎல் தொடரில் பங்கேற்க சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமில் கலந்து கொண்டார்.அந்த முகாம் ஆகஸ்ட் 15 முதல் 20 வரை சென்னையில் நடைபெற்றது. அந்த முகாம் முடிந்த நிலையில் ஆகஸ்ட் 21 அன்று சிஎஸ்கே அணியுடன் அவரும் துபாய் கிளம்பிச் சென்றார்.

ஓய்வு அறிவிப்பு
ஆகஸ்ட் 15 அன்று ரெய்னா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. ஓய்வு பெற்ற ரெய்னா 2020 ஐபிஎல் தொடரில் தன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு
இந்த நிலையில், துபாயில் இருந்த சிஎஸ்கே அணியில் இரண்டு வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக பரபரப்பு தகவல் ஒன்று வெளியானது. அதைத் தொடர்ந்து ரெய்னா இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்தே விலகுவதாக சிஎஸ்கே அணி அறிவித்தது.

ரெய்னா பங்கேற்க மாட்டார்
ரெய்னா தனிப்பட்ட காரணங்களால் இந்தியாவுக்கு திரும்பி உள்ளதாகவும், இந்த சீசன் ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்க மாட்டார் என சிஎஸ்கே அறிவித்தது. அந்த தகவல் மேலும் அதிர்ச்சி அளித்தது. ரெய்னா ஏன் துபாய் வரை சென்று பின் மீண்டும் இந்தியாவுக்கே திரும்பினார்? என்ற கேள்வி எழுந்தது.

அதிர்ச்சித் தகவல்
சிலர் சிஎஸ்கே வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் அவர் இந்தியாவுக்கே திரும்பி இருக்கலாம் என கூறி வந்தனர். இந்த நிலையில், அவரது உறவினர்கள் பற்றிய அதிர்ச்சித் தகவல் ஜாக்ரான் என்ற பத்திரிக்கை செய்தி மூலம் தெரிய வந்தது.

கொடூர தாக்குதல்
அந்த செய்தியில் சுரேஷ் ரெய்னாவின் தந்தை வழி அத்தை வீட்டில் நடந்த கொடூர தாக்குதல் பற்றி கூறப்பட்டுள்ளது. ரெய்னாவின் அத்தை வீடு பதான்கோட்டில் உள்ள தரியல் என்ற கிராமத்தில் உள்ளது. ஆகஸ்ட் 19 அன்று இரவு தாக்குதல் நடந்துள்ளது.

மோசமான ஆயுதங்கள்
அன்றைய தினம் இரவு ரெய்னாவின் அத்தை ஆஷா தேவி மற்றும் குடும்பத்தினர் மொட்டை மாடியில் படுத்து தூங்கி உள்ளனர். அப்போது மர்ம கும்பல் ஒன்று அவர்கள் அனைவரையும் மோசமான ஆயுதங்கள் கொண்டு தாக்கி உள்ளது.

ரெய்னாவின் மாமா மரணம்
அந்த தாக்குதலில் ரெய்னாவின் மாமா அசோக் குமார் (58 வயது) மரணம் அடைந்துள்ளார். ஆஷா தேவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார். அவரது மகன்கள் கௌஷால் குமார் (32 வயது), அபின் குமார் (24 வயது) ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

80 வயது தாயாருக்கும் காயம்
மரணம் அடைந்த அசோக் குமாரின் 80 வயது தாயாரையும் அந்த கும்பல் தாக்கி உள்ளது. அவருக்கும் காயங்கள் ஏற்பட்டு உள்ளது. இவர்கள் அனைவரும் ரெய்னாவின் உறவினர்கள் என்பதை அறிந்து பதான்கோட் காவல்துறை விசாரணை வேகத்தை அதிகரித்துள்ளது.

தடயம்?
மோப்ப நாய் எந்த தடயத்தையும் அளிக்கவில்லை. சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சில தடயங்களை காவல்துறை கைப்பற்றி உள்ளது. அதை வைத்து அந்த மர்ம கும்பலை கண்டறியும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து அறிந்தே ரெய்னா இந்தியா திரும்பி இருக்கிறார் என தகவல்கள் கூறுகின்றன. இந்த தாக்குதல் நடந்த போது ரெய்னா சென்னை பயிற்சி முகாமில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications