இந்தியா - பாக் மேட்ச்: ரூ 10000 கோடி உச்சகட்ட பெட்டிங்!
டெல்லி: இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிப் போட்டிக்காக கட்டப்பட்டுள்ள பெட்டிங் தொகை ரூ 10000 கோடியைத் தாண்டியுள்ளதாம். நேற்று மாலை முதல் இன்று காலை வரை மட்டும் ரூ 3000 கோடியை பெட்டிங்காகக் கட்டியுள்ளார்களாம் கிரிக்கெட் சூதாட்டக்காரர்கள்.

இந்தியா - பாகிஸ்தான் இரு அணிகளுக்குமே சம அளவில் பெட்டிங் கட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் இன்று இந்தியாவும், பாகிஸ்தானும் பலப் பரீட்சை நடத்தவிருக்கின்றன. இந்த போட்டி இரு நாட்டு ரசிகர்களிடம் மட்டுமல்ல, உலகமெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் ஆர்வத்தைக் கிளறியுள்ளது.
கிரிக்கெட் உலகில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா என எத்தனையோ அணிகள் இருந்தாலும், ஜாம்பவான்கள் என்றால் அவை இந்தியாவும் பாகிஸ்தானும்தான் என்ற நிலையை இரு அணிகளும் ஏற்படுத்தியுள்ளன.
இதற்கிடையே உச்சக் கட்ட பரபரப்பால் கிரிக்கெட் சூதாட்டமும் இதுவரை இல்லாத அளவுக்கு சூடு பிடித்துள்ளது. உலகக் கோப்பை தொடங்கிய போது கோப்பையை தென்ஆப்பிரிக்கா வெல்ல வாய்ப்பு இருப்பதாக சூதாட்டம் நடந்தது. கால் இறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்கா தோல்வி அடைந்ததும், சூதாட்டக்காரர்கள் அதிர்ச்சிக்கும் தவிப்புக்கும் உள்ளானார்கள். இந்த நிலையில் தற்போது இந்தியாவை மையமாக வைத்து கிரிக்கெட் சூதாட்டம் களை கட்டியுள்ளது.
அரை இறுதியில் எந்த அணி வெற்றி பெறும் என்பதில் பல ஆயிரம் கோடி ரூபாய் வாரி இறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உலகம் முழுக்க 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக சூதாட்டம் நடப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்று மாலையிலிருந்து இன்று காலை வரை ரூ 3000 கோடிக்கு பந்தயம் கட்டியுள்ளனராம் சூதாட்டக்காரர்கள்.
கிரிக்கெட் பெட்டிங் விஷயத்தில் இந்த உலகக் கோப்பையில் மட்டும்தான் மிக அதிக அளவு பணம் விளையாடுகிறது. இதற்கு முந்தைய உலகக் கோப்பையில் ரூ 2800 கோடி பெட்டிங் கட்டப்பட்டதுதான் சாதனையாக இருந்தது.
ஒவ்வொரு ஓவரிலும், ஒவ்வொரு பந்திலும் எத்தனை ரன் கிடைக்கும் என்று கூட சூதாட்டம் நடக்கிறது. அது போல நாளைய ஆட்டத்தின் போது முனாப் படேல், சோயிப் அக்தர், ஜாஹீர் கான் எத்தனை விக்கெட் எடுப்பார்கள் என்றும் சூதாட்டம் நடக்கிறது. சேவாக் எத்தனையாவது ரன்னில் வீழ்வார் என்றும் கூட பந்தயம் கட்டியுள்ளனராம்.
இந்திய அணி ஜெயிக்கும் என பந்தயம் கட்டியவர்களுக்கு 6 மடங்கு அதிக பணம் கிடைக்கும். துபாயைச் சேர்ந்த ஒருவர் 6 கோடி ரூபாய் கட்டியுள்ளாராம். இந்தியா ஜெயித்தால் இவருக்கு ரூ 36 கோடி கிடைக்குமாம்!
பெட்டிங் தொடர்பாக உலகக் கோப்பை ஆரம்பமானதிலிருந்து இன்றுவரை 13 புக்கிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்போது இரு அணி வீரர்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களைச் சந்திக்க பார்வையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:45 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications