அள்ள அள்ளக் குறையாத சாதனைகள்.. ஆஸி.யை அடித்துத் துவைத்த இங்கிலாந்து
லண்டன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரில் இங்கிலாந்து தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.
ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஏகப்பட்ட சாதனைகள் படைக்கப்பட்டன. அவற்றின் தொகுப்பு.

அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர்
இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 481 ரன்கள் குவித்தது. ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இதுவே அதிகபட்சமாகும். இதற்கு முன்னர் இங்கிலாந்து அணி 444 ரன்கள் குவித்ததே சாதனையாகும்

அதிவேக அரைசதம்
மிக குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை இங்கிலாந்து கேப்டன் மோர்கன் படைத்தார். அவர் 21 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதற்கு முன்னர் ஜோஸ் பட்லர் 22 பந்துகளில் அரைசதம் அடித்ததே இங்கிலாந்து அணி வீரரின் தனிப்பட்ட சாதனையாகும்.

அதிக ரன்கள் அடித்த வீரர்
நேற்றைய போட்டியில் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் மற்றுமொரு சாதனை படைத்தார். அதாவது ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.அவர் 167 இன்னிங்சில் ஆடி 5443 ரன்கள் குவித்துள்ளார்.இதற்கு முன் இயன் பெல் அடித்த 5416 ரன்களே அதிகபட்சமாக இருந்தது.

அதிகபட்ச சிக்ஸர்கள்
இங்கிலாந்து அணி இப்போட்டியில் 21 சிக்ஸர்களை அடித்தது.இதுவே ஒரு போட்டியில் அந்த அணியின் அதிகபட்ச சிக்ஸர்கள் ஆகும் .ஒட்டுமொத்தமாக நியூஸிலாந்து அடித்த 22 சிக்ஸர்களே இதுவரை சாதனையாகும்.

அதிகபட்ச பவுண்டரிகள்
இங்கிலாந்து அணி ஒட்டுமொத்தமாக 62 பௌண்டரிகளை விளாசியது. இதுவே ஒரு அணியின் அதிகபட்சமாகும். இதற்கு முன்னால் இங்கிலாந்து மற்றும் இலங்கை அடித்த 59 பௌண்டரிகளே அதிகம் .

வெற்றி மற்றும் தோல்வி
ஆஸ்திரேலியா அணி இந்த போட்டியில் 242 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அடைந்த தோல்வி இதுவேயாகும். அதே போல இங்கிலாந்து அணி இவ்வளவு பெரிய ரன்கள் வித்தியாசத்தில் (242) ஒரு அணியிடம் வெற்றி பெறுவதும் இதுவே முதல் முறை.இதற்கு முன்னாள் நியூஸிலாந்துக்கு எதிராக 210 ரன்கள் வித்தியாசத்தில் பெற்றதே அவர்களின் பெரிய வெற்றியாக இருந்தது.

தொடர்ச்சியான 4 ஆவது தொடர் தோல்வி
இரு நாடுகளுக்கிடையேயான போட்டி தொடரில் தொடர்ந்து 4 முறை ஆஸ்திரேலியா தோல்வி அடைந்துள்ளது.கடைசியா அந்த அணி 1984 ஆம் ஆண்டு இது போன்றவொரு தோல்வியை சந்தித்தது. அதன் பின்னர் இப்போது மீண்டும் இந்தியா , நியூஸிலாந்து , இங்கிலாந்து (இரு முறை) தோல்வியடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications