பெங்களூர்: ஆஸ்திரேலியா யு19 அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய யு19 அணியில் ராகுல் டிராவிட் மகன் சமித் டிராவிட் தேர்வு செய்யப்பட்டிருப்பது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கூச் பெஹார் டிராபி மற்றும் வினோ மன்கட் டிராபியில் சமித் டிராவிட்டின் செயல்பாடுகளை பார்க்கலாம்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் ஆஸ்திரேலியா யு19 அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. செப்.21ஆம் தேதி முதல் செப்.26ஆம் தேதி வரை ஒருநாள் தொடரும், செப்.30 முதல் அக்.10 வரை டெஸ்ட் தொடரும் நடக்கவுள்ளது. இதற்காக புதுச்சேரி மற்றும் சென்னை மைதானங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

ஆஸ்திரேலியா யு19 அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய யு19 அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் இந்திய அணியின் கேப்டனாக முகமது அமான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் துணைக் கேப்டனாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ருத்ர படேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதில் கர்நாடகா மாநிலத்தில் இருந்து மட்டும் 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
அதிலும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ராகுல் டிராவிட்டின் மகன் தேர்வு செய்யப்பட்டது எப்படி என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே சமித் டிராவிட்டின் பெயர் மீடியாக்களில் அதிகளவு இடம்பெற தொடங்கியது. கூச் பெஹார் டிராபியில் சமித் டிராவிட் விளையாடிய வீடியோக்களும் ட்ரெண்டாகின.
ஜாம்பவான் வீரரின் மகன் என்பதால் மீடியா வெளிச்சம் சாதாரண விஷயம் என்றாலும், அவருக்கான முக்கியத்துவம் தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்தது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த நிலையில் ஆல் ரவுண்டரான சமித் டிராவிட்டின் செயல்பாடுகள் குறித்து பார்க்கப்பட்ட போது இன்னும் சில விஷயங்கள் தெரிய வந்துள்ளன.
அதன்படி கூச் பெஹார் டிராபியில் விளையாடிய சமித் டிராவிட் 10 இன்னிங்ஸில் 3 அரைசதம் உட்பட 362 ரன்களை விளாசியுள்ளார். அதேபோல் 8 போட்டிகளில் விளையாடிய சமித் டிராவிட் 16 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். அதேபோல் வினோ மன்கட் டிராபி தொடரில் 4 போட்டிகளில் விளையாடிய சமித் டிராவிட், 122 ரன்களும், 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்.
அதேபோல் மகாராஜா டிராபி டி20 தொடரில் 7 போட்டிகளில் விளையாடிய சமித் டிராவிட், 82 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். இதில் இவருக்கு பவுலிங் செய்ய வாய்ப்பு அளிக்கப்படவில்லை. மோசமான ரெக்கார்ட் இல்லையென்றாலும், இந்திய யு19 அணியில் தேர்வு செய்வதற்கு இது போதுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆல்ரவுண்டர் என்பதால் முன்னுரிமை வழங்கப்பட்டிருக்கலாம் என்று இன்னும் சில தகவல் கூறப்பட்டு வருகின்றன.
மேலும் இந்திய யு19 அணித் தேர்வில் என்சிஏ பயிற்சி முகாமில் வீரர்களின் செயல்பாடுகளும் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன. இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ராகுல் டிராவிட் என்சிஏ தலைவராகவும் சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இதனால் சமித் டிராவிட் தேர்வு குறித்து நெப்போடிஸம் தொடர்பான பேச்சுகள் எழுந்துள்ளது. இந்திய யு19 அணி தேர்வில் தனது மகனை தேர்வு செய்ய வேண்டும் என்று ராகுல் டிராவிட் பரிந்துரை செய்தாரா என்ற சந்தேகத்தையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.