சிட்னி: வங்கதேச ரசிகர்கள் எப்படி பாகிஸ்தான் நடுவர் அலீம்தாரை வறுத்தெடுத்தனரோ, அதேபோல இன்று இந்திய ரசிகர்கள் இங்கிலாந்தை சேர்ந்த நடுவரான ரிச்சர்ட் கேட்லிபோராவை கடுகடுக்கின்றனர்.
இந்தியா-ஆஸ்திரேலியா அரையிறுதி ஆட்டத்தில், 22.4வது ஓவரில் 43 ரன்களுடன் பின்ச் பேட் செய்து வந்தார். அப்போது ஜடேஜா பந்தை எதிர்கொண்டார். அந்த பந்து பேட்டில் படாமல், பின்ச் காலில் பட்டது. எனவே அவுட் கேட்டு பார்த்தார், ஜடேஜா. அம்பயர் தரவில்லை. எனவே ரிவ்யூ கேட்டார். ஆனால், டோணிக்கு முழு திருப்தியில்லை. வேண்டாம் என்று சொல்லிப் பார்த்தார். ஆனால் ஜடேஜா, பிடிவாதமாக அது அவுட்தான் என்றதால் ரிவ்யூ கேட்டார் டோணி.

இதையடுத்து ரிவ்யூ கேட்கப்பட்டது. டிவி ரிப்ளேயில் பார்த்தபோது, அந்த பந்து ஸ்டம்பை பதம் பார்த்திருக்கும் என்று வரைபடம் கூறியது. எனவே இந்திய ரசிகர்கள் பின்ச் அவுட் ஆகிவிட்டார் என்று நினைத்தனர். ஆனால் மூன்றாம் நடுவரோ அம்பயர் கால் என்று அறிவித்துவிட்டார். எனவே களநடுவர் ரிச்சர்ட் கேட்லிபோரா அவரது டிவிலேயே உறுதியாக நின்று, அதை அவுட் இல்லை என்று அறிவித்துவிட்டார்.
இதையடுத்து சமூக வலைத்தளங்களில் ரிச்சட்டை வறுக்க ஆரம்பித்துள்ளனர். அவர் இங்கிலாந்தை சேர்ந்த நடுவராகும். இலங்கையின் தர்மசேனா இந்த ரிவ்யூவின்போது லெக் அம்பயராக நின்று கொண்டிருந்தார். அவர் கள நடுவராக இருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்று வலைவாசிகள் விமர்சனம் செய்கின்றனர்.
இப்படித்தான் வங்கதேசம்-இந்தியா நடுவேயான காலிறுதி போட்டியில், லெக் அம்பயராக நின்று கொண்டிருந்த பாகிஸ்தானின் அலீம்தார், ரோகித் ஷர்மா கேட்ச் கொடுத்த பந்தை உயரத்தின் அடிப்படையில் நோபால் என்று அறிவித்தார். ஆனால் அது முட்டி அளவுக்கே உயர்ந்து சென்றிருந்தது. எனவே அலீம்தாரை வங்கதேசத்தினர் வறுத்தனர்.
இந்தியா-ஆஸ்திரேலியா அரையிறுதி போட்டிக்கான நடுவர்கள் விவரம்: ரஞ்சன் மதுகலே (போட்டி ரெப்ரி), குமார் தர்மசேனா மற்றும் ரிச்சர்ட் கேட்லிபோரா (கள நடுவர்கள்) மாராய்ஸ் எராஸ்மஸ் (மூன்றாம் நடுவர்) ரிச்சர்ட் இல்லிங்வொர்த் (நாலாம் நடுவர்) .