இந்த வீரரை டீமில் இருந்து தூக்க வேண்டிய நேரம்.. அவருக்கு பேக்-பூட்டில் ஆட வரலை.. பாண்டிங் அதிரடி
சிட்னி: ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் மார்னஸ் லாபுசேன் தொடர்ந்து சொதப்பி வருவதால், அவரை அணியிலிருந்து நீக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் வலியுறுத்தியுள்ளார்.
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், 3 வது வீரராகக் களம் இறங்கிய லாபுசேன் வெறும் 4 ரன்களுக்கு ஷோரிபுல் இஸ்லாம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கடந்த ஆஷஸ் 2023 தொடருக்குப் பிறகு லாபுசேன் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. மேலும், அவரது கடைசி 10 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் கூடப் பதிவு செய்யவில்லை. இதனால் அவரது மோசமான ஆட்டத்திறன் கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.

இது குறித்துப் பேசிய ரிக்கி பாண்டிங், "அவர் மீண்டும் தனது சிறந்த ஆட்டத்திற்குத் திரும்ப வேண்டும் என்று தேர்வுக் குழு முயற்சிப்பதை நான் மதிக்கிறேன். ஆனால், இதற்கான கால அவகாசம் மிகவும் கடந்துவிட்டது. நான் இருந்திருந்தால் இந்தத் தொடரின் தொடக்கத்திலேயே அவரை அணியிலிருந்து நீக்கியிருப்பேன். லாபுசேனிடம் சில டெக்னிகல் தவறுகள் உள்ளன. குறிப்பாக அவரால் பேக்-புட்டில் விளையாடி ரன் குவிக்க முடியவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் பேக்-புட்டில் விளையாட முடியாவிட்டால் பேட்டிங் செய்வது மிகவும் கடினம். எனவே, அவருக்குப் பதிலாக மாற்று வீரரைப் பார்க்க வேண்டிய நேரம் இது" என்று கூறியுள்ளார்.
வங்கதேச டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி இரண்டாவது போட்டியில் மீண்டு வந்து வங்கதேச அணி மீது ஆதிக்கம் செலுத்தி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. ஆனாலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கில் சில பலவீனங்ககள் வெளிப்பட்டன. பந்துவீச்சாளர்களின் சிறப்பான செயல்பாட்டால் தான் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதற்குள் ஆஸ்திரேலிய அணி தங்களது பேட்டிங் வரிசையை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications

