துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்பதற்காக துபாய்க்கு சென்று இருக்கும் இந்திய அணியில் விக்கெட் கீப்பர் ஒருவருக்கும், பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. முக்கியமான இந்த தொடரில் முதல் போட்டியில் கூட இந்திய அணி விளையாடாத நிலையில் இது போன்ற செய்தி வெளியாகி இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவாக மாறி உள்ளது.
தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தன்னை ஓரங்கட்டுவதாகவும், பிளேயிங் லெவனில் தனக்கு இடம் அளிக்காமல் இருப்பதாகவும், ஒரு நாள் போட்டிகளில் தனக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காமல் இருக்க வேறு காரணம் இருக்கிறது, வெளியே இருக்கும் ஒரு விஷயத்தை வைத்து தன்னை அணியில் தேர்வு செய்யாமல் இருப்பதாகவும் அந்த விக்கெட் கீப்பர் கருதுகிறார் என இந்த டைம்ஸ் நவ் பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது. அந்த விக்கெட் கீப்பர்? யார் என வெளிப்படையாக சொல்லப்படவில்லை.

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் இரண்டு விக்கெட் கீப்பர்கள் இடம் பிடித்துள்ளனர். ஒருவர் கே.எல். ராகுல், மற்றொருவர் ரிஷப் பண்ட். இவர்களில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் கே.எல். ராகுலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அவரே மூன்று போட்டிகளிலும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்பட்டார்.
ரிஷப் பண்டுக்கு ஒரு நாள் அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவர் மாற்று வீரராக வெளியே அமர வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு செல்லும் முன் கவுதம் கம்பீர் பேட்டி அளித்தார். அப்போது ரிஷப் பண்ட் பிளேயிங் லெவனில் இடம் பெற வாய்ப்பு உள்ளதா? என அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த கவுதம் கம்பீர், "இப்போதைக்கு இந்திய ஒருநாள் அணியில் கே.எல். ராகுல் தான் முதன்மை விக்கெட் கீப்பர். ரிஷப் பண்டுக்கு இப்போதைக்கு அணியில் இடம் கிடைக்காது" என தெளிவாக குறிப்பிட்டார். கே.எல். ராகுலின் பேட்டிங் திறன் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக இருக்கும் நிலையில் அவரது திறமையை குறைத்து மதிப்பிட முடியாது.
அதே சமயம் ரிஷப் பண்ட் அசாதாரணமான ஆட்டத்தை ஆடும் வல்லமை உள்ளவர் என்பதால் சாம்பியன்ஸ் டிராபி போன்ற தொடரில் அவர் இக்கட்டான நேரத்தில் கை கொடுப்பார் என்ற ஒரு பார்வை உள்ளது. ஆனால் அதை கம்பீர் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்பது தான் இந்த விரிசலுக்கு காரணமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.