மும்பை : ஆப்கானிஸ்தான் வீரர் ஃபாசல்ஹக் ஃபரூக்கி, இந்திய அணியின் ரிங்கு சிங்கை முட்டியால் இடித்து வம்பிழுத்ததை அடுத்து, அவரை கட்டம் கட்டி வைத்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி. அவருக்கு அடுத்து சில காலம் அணியில் வாய்ப்பு கிடைக்காது என கூறப்படுகிறது.
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் தான் அந்த சம்பவம் நடந்தது. அப்போது ரிங்கு சிங் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அவர் சிங்கிள் ரன் எடுத்து விட்டு மீண்டும் ரன் ஓட சில அடி தூரம் முன்னே சென்று விட்டு, பின் மீண்டும் பந்துவீச்சாளர் முனைக்கே திரும்பினார். அப்போது ஃபாசல்ஹக் ஃபரூக்கி தனது பாதையில் ரிங்கு சிங் வருவதை விரும்பாமல் அவரை தன் முட்டியை வைத்து தள்ளினார்.

அத்தோடு நிற்காமல் மீண்டும் அவர் அருகே சென்று இடித்தார். தன்னை தள்ளும் போதும், இடித்த போதும் ரிங்கு சிங் அவரை நிமிர்ந்து கூட பார்க்காமல் அமைதியாக விலகிச் செல்ல முயன்றார். ஆனாலும், ஃபாசல்ஹக் ஃபரூக்கி அவர் அருகே சென்று அவரை வம்பிழுக்க முயன்றார். அப்போது அம்பயர் அவரைத் தடுத்து அனுப்பினார். ரிங்கு சிங் எந்த எதிர்ப்பும் காட்டாமல் போனதால் இந்த விவகாரம் பெரிதாக வெடிக்கவில்லை.
இந்த சம்பவத்தை அடுத்து நடந்த மூன்றாவது டி20 போட்டியில் ஃபாசல்ஹக் ஃபரூக்கி ஆப்கானிஸ்தான் அணியில் இடம் பெறவில்லை. அப்போதே ரிங்கு சிங்கை அவர் வம்பிழுத்ததே காரணமாக இருக்கும் என்ற சந்தேகம் எழுந்தது. இதற்கு முன்பும் அவர் சில சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். 2022 பிக் பாஷ் லீக் டி20 தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக அவர் ஆடினார். அப்போது அவர் சக வீரர் ஒருவரிடம் மோசமாக நடந்து கொண்டதால் அணியில் இருந்து பாதி தொடரில் நீக்கப்பட்டார்.
அடுத்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட மறுத்தார். அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டால் மற்ற நாட்டு டி20 தொடர்களில் அதிக அளவில் பங்கேற்க முடியாது என்பதால் அப்படி நடந்து கொண்டார். இப்படி வரிசையாக சர்ச்சையில் சிக்கி வரும் ஃபாசல்ஹக் ஃபரூக்கியை இனி அணியில் தேர்வு செய்வது குறித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் சில கட்டுப்பாடுகளை விதித்து இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி அவர் நடத்தையை கண்காணிக்க உள்ளதாகவும், அதன்படியே அவருக்கு இனி ஆப்கானிஸ்தான் அணியில் இடம் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.