"ரிங்கு சிங்குடன் என் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை"..பிரியா சரோஜ் தந்தை மறுப்பு
அலிகார்: இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங், உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த சமாஜ்வாடி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பிரியா சரோஜை திருமணம் செய்ய உள்ளதாகவும், அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.
ஆனால், அவற்றை பிரியா சரோஜின் தந்தை டூஃபானி சரோஜ் மறுத்து இருக்கிறார். உத்தர பிரதேச மாநிலத்தின் இளம் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் பிரியா சரோஜ். 2024 நாடாளுமன்ற தேர்தலில் அவர் தனது 25 வது வயதில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக ஆகி இருந்தார்.

அவரது தந்தை டூஃபானி சரோஜ் இதற்கு முன் மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். தற்போது அவர் எம்எல்ஏ-வாக இருக்கிறார். கிரிக்கெட் வீரர் ஆன ரிங்கு சிங், அரசியல் குடும்பத்தை சேர்ந்த, நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கும் பிரியா சரோஜை திருமணம் செய்ய இருப்பது குறித்து ரசிகர்கள் பேசி வந்தனர்.
இந்த நிலையில் அந்த செய்திகளை மறுத்து இருக்கிறார் டூஃபானி சரோஜ். இது பற்றி அவர் பேசுகையில் ரிங்கு சிங் மற்றும் பிரியா சரோஜக்கு திருமணம் குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாகவும், ஆனால், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் கூறினார்.
மேலும், இதுவரை தனது மகளுக்கு நிச்சயதார்த்தம் எதுவும் நடக்கவில்லை எனவும் கூறி இருக்கிறார். பிரியா சரோஜ் தற்போது பணி நிமித்தமாக திருவனந்தபுரத்திற்கு சென்று இருப்பதாகவும் அவர் கூறினார். எனினும், உத்தர பிரதேச ஊடக வட்டாரங்களில் ரிங்கு சிங் - பிரியா சரோஜ் நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாகவும் அவர்கள் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டதாகவும் உறுதியான தகவல்கள் என்ற பெயரில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
ஒருவேளை டூஃபானி சரோஜ் தற்போது இந்த செய்தியை வெளியிட வேண்டாம் என்ற எண்ணத்தில் இவ்வாறு மறுத்து கூறி இருக்கிறாரா? என்ற சந்தேகமும் உள்ளது. பிரியா சரோஜ் பாஜக வேட்பாளரை வீழ்த்தி தான் நாடாளுமன்ற உறுப்பினராக ஆனார்.
ரிங்கு சிங் தற்போது இந்திய அணியில் இடம் பெற்று இருக்கும் நிலையில் அவர் முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாடியை சேர்ந்த பிரியா சரோஜை திருமணம் செய்தால் அது அவரது கிரிக்கெட் வாழ்வை பாதிக்கக்கூடும் எனவும் சில ரசிகர்கள் தங்கள் ஊகங்களை வெளிப்படுத்தி உள்ளனர்.


Click it and Unblock the Notifications