"ஏழையா இருந்தப்ப நல்லா விளையாடினார் ஆனா இப்ப..".. ரிங்கு சிங்கை சீண்டிய நெட்டிசன்கள்.. பொங்கிய ஆகாஷ்
கொல்கத்தா: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு, தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் முதல் வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளார் 'பினிஷர்' ரிங்கு சிங். ஆனால், கடந்த சில நாட்களாக அவர் ரன் எடுக்கத் திணறியபோது, நெட்டிசன்கள் அவரை மிகக் மோசமாக விமர்சனம் செய்ததோடு, அவரது வறுமை காலத்தை ஒப்பிட்டு எல்லை மீறி பேசினர். இதற்கு இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா மிகக் காரசாரமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 28-வது லீக் போட்டியில் கொல்கத்தா அணி 156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடியது. ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் 85 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா தடுமாறியபோது, ரிங்கு சிங் களம் புகுந்தார். 5 போட்டிகளில் வரிசையாகத் தோற்றுப் போயிருந்த தனது அணியை எப்படியாவது மீட்டெடுக்க வேண்டும் என்ற பிடிவாதத்துடன் அவர் விளையாடினார்.

மிக அழுத்தமான சூழலில் நிதானமாகவும் அதிரடியாகவும் ஆடிய அவர், 34 பந்துகளில் 53 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெறச் செய்தார். இதன் மூலம் கொல்கத்தா அணி இந்த சீசனின் முதல் வெற்றியை 19.4 ஓவர்களில் எட்டிப் பிடித்தது. ரிங்கு சிங்கின் இந்த மிரட்டலான வெற்றியைக் கொண்டாடும் வேளையில், அவர் மீது வீசப்பட்ட தனிப்பட்ட தாக்குதல்கள் குறித்து ஆகாஷ் சோப்ரா வேதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்துத் தனது யூடியூப் பக்கத்தில் ஆகாஷ் சோப்ரா கூறுகையில், "ரிங்கு சிங் ஃபார்ம் அவுட்டில் இருந்தபோது அவரைப் பற்றிப் பேசியவர்கள் வெட்கப்பட வேண்டும். 'ரிங்கு சிங் ஏழையாக இருந்தபோதுதான் நன்றாக விளையாடினார், இப்போது வசதி வந்தவுடன் ஆட்டம் குறைந்துவிட்டது' என்று சிலர் கூறுகிறார்கள். ஒருவரின் வறுமையையும் கடந்த காலத்தையும் கேலி செய்ய உங்களுக்கு எப்படி மனது வருகிறது? உங்களைப் பற்றி யாராவது இப்படிப் பேசினால் உங்களுக்கு எப்படி இருக்கும்?" எனக் கோபமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் பேசிய ஆகாஷ் சோப்ரா, "அவர் ஒரு உலக சாம்பியன் என்பதை மக்கள் மறந்துவிட்டார்கள். அவருக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் மிகக் குறைவு. அவர் விளையாடும் 5 அல்லது 6-வது பேட்டிங் வரிசை மிகவும் கடினமானது. எல்லா வீரர்களுக்கும் ஒரு மோசமான காலம் வரும். அதற்காக அவர் ஏதோ மிகப்பெரிய குற்றம் செய்தது போல அவரை சமூக வலைதளங்களில் வறுத்தெடுப்பது கண்டிக்கத்தக்கது" எனத் தெரிவித்தார்.
வெற்றிக்குப் பிறகு பேசிய ரிங்கு சிங், "எனது நோக்கம் ஆட்டத்தைக் கடைசி வரை கொண்டு செல்வதுதான். பயிற்சியாளர் மற்றும் சக வீரர்களுடன் கலந்து பேசி இந்த முடிவை எடுத்தேன். ஒரு இக்கட்டான சூழலில் அணி இருந்ததால், நிதானமாக ஆட நினைத்தேன்" என்றார். ரிங்கு சிங்கின் இந்த ஆட்டம், அவரை வறுமையைக் கூறி கிண்டல் செய்தவர்களுக்குப் பேட் மூலம் கொடுத்த தகுந்த பதிலடியாகப் பார்க்கப்படுகிறது. 7 போட்டிகளில் விளையாடி தற்போது 3 புள்ளிகளுடன் உள்ள கொல்கத்தா அணிக்கு, ரிங்கு சிங்கின் இந்த அதிரடி ஃபார்ம் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications